2017 - 2018ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்தியாவின் வேலையின்மை விகிதம் 6.1 சதவீதம் என்ற அதிர்ச்சிகரமான விபரங்கள் தெரியவந்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு முதன்முதலாக வேலையின்மை குறித்து வெளியாகியுள்ள விபரம் இது. இதை அரசே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய இளைஞர்கள் மோடியின் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு அற்றவர்களாக, வேலைவாய்ப்பை இழந்தவர்களாக, வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கிறார்கள்.
விபரங்கள் வெளியாகியிருக்கக்கூடிய நிலையில் மோடியின் அமைச்சர்கள், இது தவறான விபரம் எனக் கூறி மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏற்கெனவே இதே முயற்சிகளை அவர்கள் செய்தார்கள். இதன் விளைவாக, மேற்கண்ட புள்ளி விபரங்களை தயாரிக்கும் பொறுப்பிலிருந்த தேசிய மாதிரி சர்வே அமைப்பின் முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு சென்ற சம்பவம் கூட நடந்தது. இப்போது, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வேலையின்மை பிரச்சனை நிலவுகிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் மோடி அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? எமது தேசத்தின் இளைஞர்களை ஏமாற்றியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்போகிறதா? அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறதா? பதில் சொல்லி ஆக வேண்டும் மோடி அரசே!