1919 - மேற்கு ஆஃப்ரிக்க பிரெஞ்சுக் குடியேற்றமான அப்பர்பமேல்) வோல்ட்டா உருவாக்கப்பட்டது. தற்போது புர்க்கினோ ஃபேசோ என்ற நாடாக இருக்கும் இது, வோல்ட்டா ஆற்றுக்கு மேலே அமைந்த பகுதி என்பதால் அப்போது அப்பர் வோல்ட்டா என்ற பெயர் சூட்டப்பட்டது. உலகம் முழுவதும் குடியேற்றங்களை ஏற்படுத்திய ஐரோப்பியர்கள், கீழை நாடுகளுக்கு வருவதற்காக, ஆஃப்ரிக்காவைக் கடந்து வந்தாலும், அதன்துறைமுகப் பகுதிகளில் வணிக மையங்களை மட்டுமே அமைத்தனர். அங்கிருந்த சூழல்கள் ஐரோப்பியர்களுக்கு ஒத்துக்கொள்ளாததால், ஆஃப்ரிக்காவின் உட்பகுதிக்குச் சென்று குடியேற்றங்களை நிறுவவில்லை. 1870வரையே, ஆஃப்ரிக்காவின் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், 1881இலிருந்து 1914வரை ஆஃப்ரிக்காவின் பகுதிகளை கைப்பற்ற ஐரோப்பியநாடுகளிடையே நடைபெற்றது ‘ஆஃப்ரிக்கப் போட்டி’ என்றே குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான்,
1896இல் இப்பகுதியைக் கைப்பற்ற பிரான்ஸ் முயற்சித்தபோது, மோசி என்ற மேற்கு ஆஃப்ரிக்கத் தொல்குடியினர் இப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தனர். பல குறுநில முடியரசுகளைக்கொண்ட இது, மோசி பேரரசு என்றும்கூட குறிப்பிடப்படுகிறது. மோசி மக்களை பிரெஞ்சுக்காரர்களால் அவ்வளவு எளிதில் வென்றுவிட முடியவில்லை. 23 ஆண்டுகள் முயற்சித்து, 1919இல்தான் மோசிக்களின் தலைநகரான வாகடூகூ-வை கைப்பற்ற முடிந்தது. அப்போது உருவாக்கப்பட்ட இந்த அப்பர் வோல்ட்டாவில் போதுமான பொருளாதார வளர்ச்சியின்மையால், 1932இல் பிரிக்கப்பட்டு, அப்போதையே பிற பிரெஞ்சுக் குடியேற்றங்களான, ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் சூடான், நைஜர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுவிட்டது. 1937இல் அப்பகுதிகளை மீண்டும் அப்பர் கோஸ்ட் என்ற பெயரில் ஒருங்கிணைத்து, ஒரு நிர்வாகப் பிரிவாக மாற்றிய பிரான்சு, இரண்டாம் உலகப்போருக்குப்பின் மோசி மக்களின் போராட்டத்தால், 1947இல் மீண்டும் பழைய அப்பர் வோல்ட்டாவாகவே மாற்றியது. பிரான்சின் கடல்கடந்த குடியேற்றங்களை மறுசீரமைக்க 1957இல் பிரான்ஸ் இயற்றிய ‘அடிப்படைச் சட்டம்’ என்ற சட்டத்தின்படி, 1958இல் அப்பர் வோல்ட்டா குடியரசு என்ற பெயரில் தன்னாட்சி பெற்றது. 1960இல் முழுமையாக விடுதலை பெற்ற இது, 1984இல் புர்கினோ ஃபேசோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மோசி மொழியில் புர்கினோ என்றால் நேரான என்றும், பேஃசோ என்றால் தந்தையின் வீடு என்றும் பொருள். நேர்மையான மக்களின் மண் என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டது.