tamilnadu

img

முதலைகளுடன் விவசாயிகள் மோத முடியுமா? கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி கேள்வி

2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக ஆளும் அரசு தேர்தல் வாக்குறுதிஅளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியைஎட்டும் வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்களும் இல்லை  விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில், சில நகாசு வேலை செய்து பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவான வகையில் இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது.

“இந்த மசோதா வரையறுக்கும் உடன்பாட்டை படித்துப் புரிந்து கொண்டு கையெழுத்திடும் அளவுக்கும் நம் நாட்டில் எத்தனைவிவசாயிகள் படிப்பறிவைப் பெற்றிருக்கிறார்கள்? இந்த மசோதா விவசாயிகளுக்கு மேலும்சிக்கலாகுமே தவிர, அவர்களின் நலனை அதுபாதுகாக்கப்போவதில்லை.” “ஒருவேளை போட்டிச் சந்தை வியாபாரத்தில் விவசாயி சிக்கலை சந்தித்தால் அவர்மத்தியஸ்த வாரியத்துக்கு செல்ல வேண்டும்.அங்கு 30 நாட்களுக்குள் ஏதும் நடக்காவிட்டால், அவர் துணை வட்டாட்சியரிடம் செல்ல வேண்டும். அங்கும் பயனளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் அவர் செல்ல வேண்டும். இந்த நடைமுறையின் மூலம் ஏழை விவசாயிகள், கார்ப்பரேட்டு முதலைகளுடன் மோதிசட்டப்போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வளவு மனவுளைச்சலை எதிர்கொண்ட பிறகும் விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?” 

பெப்ஸியுடன் போராட்டம்
“உதாரணமாக ஓராண்டுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு வகை உருளைக்கிழங்கை விளைவித்த விவசாயிகளுக்கு எதிராக பெப்ஸி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. குறிப்பிட்ட அந்த ரக உருளைக்கிழங்குக்கு பெப்ஸி நிறுவனம் உரிமம் பெற்றிருந்ததை விவசாயிகள் அறிந்திருக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுடன் விவசாயிகள் போட்டிபோடும் அளவுக்கு சமமான நிலை நம் நாட்டில் கிடையாது. இதனால்தான் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் மசோதாவுக்கு எதிராகவிவசாயிகள் வீதிகளில் இறங்கிப்போராடுகிறார்கள்.

கார்ப்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்களின் கருணையில் இந்திய விவசாயிகள் வாழவேண்டும் என இந்திய அரசு கருதுகிறதா? ஏற்கெனவே கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள்அதிகரித்துள்ளன. உற்பத்தி செலவையும், பயிர் இழப்பையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் போராட வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரமான இலவச மின்சாரத்தை தொடரும்படி அவர்கள் கோரி வருகிறார்கள். இதுதவிர பிரதமரின் விவசாய காப்பீடு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் மோசடிநடந்துள்ளது. தமிழ்நாட்டில் அந்த மோசடி எண்ணிக்கை ஆயிரம் கோடி ரூபாயை கடந்து விட்டது. இப்படிப்பட்ட சூழலில் அரசு கொண்டு வரும் இந்த கொடூரமான மசோதா, விவசாயிகளை மரணப்புதைகுழியில் தள்ளுவதற்கு ஒப்பாகும். இதை திரும்பப்பெற வேண்டும்” என்று ஜோதிமணி பேசினார்.

பொள்ளாச்சி தொகுதி திமுக உறுப்பினர் கே. சண்முகசுந்தரம் பேசும்போது, “உணவுப்பொருட்கள் தேக்கத்தை தடுக்க விவசாயிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் அவசர சட்டம்கொண்டு வந்து அத்தியாவசியப் பொருட்கள்சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான அவசர சட்டம் கொண்டு வந்து விவசாய பொருட்கள் உற்பத்தியில் ஏகபோகத்தை நிறுத்தப்போவதாகக் கூறியது. பிறகு விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. மாநில உரிமை தொடர்புடைய இந்த விவகாரத்தில் எவ்வாறு ஒரு மசோதாவை கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பது தெளிவாகவில்லை” என்று கூறினார்.

மாநில உரிமை பறிப்பு
இந்தியாவில் விவசாயம்  மாநில அரசின்கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாகஇயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், காண்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரியசங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம்அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.