ஐஎன்எஸ் மீடியா தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்துக்கு ஐ என் எஸ் மீடியா வழக்கில் உள்ள தொடர்பு குறித்து துஷர் மேத்தா விளக்கினார். ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை, ஆனால் ப.சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார். அந்த கேள்விகளுக்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும். ப.சிதம்பரம் அமைதியாக இல்லை, ஆனால் தவிர்த்து வருகிறார். முறைகேடு தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் எந்த பதிலும் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களோடு சேர்த்து வைத்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சதியை வெளியே கொண்டுவர காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளோம், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை ப.சிதம்பரம் கொடுக்கவில்லை, குறிப்பிட்ட கேள்விகளுக்கு பாதுகாப்பு என்ற நிலையில் இல்லாத போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிப்பார்கள். காவலில் இருக்கும் போது தான் சில கேள்விகளுக்கு பதிலை பெற முடியும்.
பண மோசடிக்கு இது சரியான முன் உதாரண வழக்கு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சிடி எனப்படும் வழக்கு விபரங்களை பதிவு செய்கிறோம் என வாதாடினார்.
ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் வாதிடும் போது கூறியதாவது:-
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார். மற்றொருவரான ஆடிட்டர் பாஸ்கரராமன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டியவர் கார்த்தி சிதம்பரம். மார்ச் 2018 இல் டெல்லி உயர்நீதிமன்றத்தால் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது, உச்சநீதிமன்றத்தில் சவால்கள் தலையிடவில்லை. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்தது. பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி ஆகியோருக்கு இயல்புநிலை ஜாமீன் கிடைத்து உள்ளது.
முதலீடுகளை அனுமதித்த உத்தரவை எப்ஐபிபி ( FIPB) அமைப்பில் இருந்த 6 செயலாளர்கள் வழங்கினார்கள். ஆனால் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கேட்ட கேள்விகளையே கேட்டு இருக்கிறார்கள். அதனால் தான் அவர் அமைதியாக இருந்தார்.
நேற்று இரவு சி.பி.ஐ, ப.சிதம்பரத்தை விசாரிக்க விரும்புவதாகக் கூறினர், அவர்கள் மதியம் 12 மணி வரை விசாரணையைத் தொடங்கவில்லை, அவரிடம் 12 கேள்விகளை மட்டுமே கேட்டார்கள். இப்போது அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கேள்விகளுக்கும், ப.சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ப.சிதம்பரம் 24 மணி நேரமாக தூங்கவில்லை.
சிபிஐ கூறுவது எல்லாம் வேதவாக்கு அல்ல. சிபிஐ கேட்ட கேள்விகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் கழித்தே இந்த வழக்கில் எப்ஐஆர் போடப்பட்டது. செயலாளர்கள் அனுமதி வழங்குவதற்கான பரிந்துரையை வழங்கிய பின்னரே நிதியமைச்சர் ஒப்புதல் வழங்கினார். ஒரே ஒரு நாள் மட்டுமே ப.சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம். சி.பி.ஐ. அழைப்பை ப.சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை. சிபிஐ இந்த வழக்கு பதிவு செய்த கட்டத்திலேயே விசாரித்து இருக்க முடியும் . பல ஆவணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள் என கூறினார்
அபிஷேக் மனு சிங்வி வாதிடும் போது கூறியதாவது:-
கேள்விகளுக்கு பதில் தராமல் தப்பிக்கிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு. ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை. கேள்விகளுக்கு பதில் தர மறுக்கிறார் என்பதற்கெல்லாம் காவலில் எடுத்து விசாரிக்க கோரலாமா? சாட்சியங்களை அழிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டை சி.பி.ஐ வைக்கவில்லை, அப்படிப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிப்பது தேவையற்றது . அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணைய ஒப்புதல் 6 செயலாளர்களால் வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆனார். நடந்தவற்றை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார்.
அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி, சாட்சி அல்ல. இந்த வழக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நடக்கவில்லை. கைது செய்வது என்பது கட்டாயமல்ல, மொத்த வழக்கே இந்திராணி முகர்ஜி சொன்னதன் அடிப்படையில் தொடரப்பட்டதுதான். இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்து பல மாதங்களுக்கு பிறகும் ப.சிதம்பரம் அழைக்கப்படவில்லை. இஷ்டம் போல் கைது செய்வது ஒருபோதும் கூடாது.
1. ஒத்துழைப்பு தராமை
2. சாட்சியங்களை அழிக்க முயலுதல்
3. தப்பிச் செல்லுதல்
இந்த மூன்று விஷயங்களுமே ப.சிதம்பரத்தின் வழக்கில் இல்லை எனும் போது கைது நடவடிக்கை அவசியமற்றது என வாதாடினார்.
நீதிமன்றத்தில் பேச விரும்புவதாகக் ப.சிதம்பரம் கூறியபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபனை தெரிவித்தார், ஆனால் அவர் இங்கு இரண்டு மூத்த வழக்கறிஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது சார்பாக பிரதிநிதித்துவம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது என கூறினார்.
இதைதொடர்ந்து ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் வாதாட நீதிபதி குஹா அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து சிதம்பரம் சிபிஐ தரப்பில் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டபோது என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன் எங்களது வங்கி கணக்குகள் குறித்து என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்கு மற்றும் அது குறித்த விபரங்களையும் கொடுத்துள்ளோம். ஆனால் சிபிஐ தரப்பில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி கேள்விகளே கேட்கப்படுகிறது என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை 4 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.