tamilnadu

img

ரூ.19 ஆயிரம் கோடி ஈவுத் தொகை வேண்டும்... எண்ணெய் நிறுவனங்களை நெருக்கும் மோடி அரசு!

புதுதில்லி:
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ரூ. 19 ஆயிரம் கோடி ஈவுத்தொகை கேட்டு, மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியை விட, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிக நிதி நெருக்கடியில் இருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது, ரூ. 19 ஆயிரம் கோடியை, உடனடியாக தந்தாக வேண்டும் என்று மத்திய அரசுகூறுவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தங்களின் அதிருப்தியை வெளிப் படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.மத்திய பாஜக அரசு, தனது தவறானபொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. 2016-இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம், நாட்டின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும்விவசாயத்தை அழித்து, பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிட்டது. ஜிடிபி4.5 சதவிகிதமாக குறைந்து விட்டது. 
ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் வரி வருவாய் அதிகரிக்கும் என்று மோடி அரசு கூறியது. முன்னதாக கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் தொழில்களை அழித்துவிட்டதால், ஏற்கெனவே கிடைத்து வந்த வரி வருவாயும் குறைந்து போய்விட்டது.தற்போது மத்திய பாஜக அரசு, தனது வருவாய் இலக்கில் (276.2 பில்லியன் அமெரிக்க டாலர்) மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், இது பெரும்பிரச்சனையாக மாறியுள்ளது.இதனால் எந்த வகையிலாவது, நிதியை திரட்டியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ள மோடி அரசு, ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாயை, பிமல் ஜலான் குழுபரிந்துரையைக் காட்டி வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டது. மேலும் 45 ஆயிரம்கோடி ரூபாயை பெறுவதற்கு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில்தான், எண்ணெய் நிறுவனங்களிடமும், ரூ. 19 ஆயிரம் கோடியை கெடுபிடியாக மத்திய அரசு கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எண்ணெய் நிறுவனங்களில் அரசு தனது முதலீட்டை வெகுவாக குறைத்துவிட்ட நிலையில், ஈவுத் தொகையை மட்டும் அதிகபட்சமாக கணக்கிட்டு கேட்பதாக அதிகாரிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசு கோரும் ரூ. 19 ஆயிரம்கோடி ஈவுத்தொகையில், 60 சதவிகித மான தொகை, ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன்ஆயில் கார்ப்பொரேசன் ஆகிய 2 எண் ணெய் நிறுவனங்கள் மட்டும் வழங்க வேண்டியது என்று கூறப்படுகிறது.அதாவது, ‘ஓஎன்ஜிசி’ ரூ. 6 ஆயிரத்து500 கோடியும், ‘இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன்’ ரூ. 5 ஆயிரத்து 500 கோடியும் தரவேண்டும் என்று கூறப்படுகிறது. இதேபோல, ‘பாரத் பெட்ரோலியம்’ ரூ. 2 ஆயிரத்து 500 கோடி, ‘கெயில் இந்தியா’ரூ. 2 ஆயிரம் கோடி, ‘ஆயில் இந்தியா’ ரூ.ஆயிரத்து 500 கோடி, ‘என்ஜினியர்ஸ் இந்தியா’ ரூ. ஆயிரம் கோடி தர வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ளது.