நாமக்கல்:
மாணவரின் மலக்கழிவை சக மாணவரை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டில் நாமக்கல் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியை விஜயலட்சுமி என்பவர் இரண்டாம் வகுப்பு மாணவரான ஒருவரை வகுப்பறையில் சக மாணவரின் கழிவை அகற்றச்செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை விஜயலட்சுமி மீது எஸ்.சி. - எஸ்.டி. பிரிவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வெள்ளியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.