நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதங்களில் கடல் சீற்றம் காரணமாக அழிக்கால் உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்குள் குறிப்பாக கடல் நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க இப்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்என்று மீனவ மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திங்களன்று மாலைஅழிக்கால் கடலில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. பனை மரஉயரத்திற்கு எழுந்த அலைகள் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. அவை கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்புக்குள்ளாயின. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்துவெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். சிலர் மேடான பகுதிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். மேலும் வீடுகள் முன்பு வெள்ளம்புகுவதை தடுக்க மணல் மூடைகளை கொண்டு அரண் அமைத்தனர். இந்நிலையில் 2 - வது நாளாக செவ்வாயன்றும் அழிக்காலில் கடல்சீற்றம் நீடித்தது. கடல் நீரும் ஊருக்குள் புகுந்தது. கடல் சீற்றம் ஏற்பட்டதும் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருக்க தடுப்புகள் அமைத்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் அலை தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே கடல்நீர் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும். தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டுகடல் அலை தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்து, அழிக்கால் மீனவ கிராமத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.மேலும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் திங்களன்று கடல் கொந்தளிப்பும், சீற்றமும் காணப்பட்டது. இந்த நிலையில் கன்னியா குமரியில் கடல் திடீரென உள்வாங்கி யது. திரிவேணி சங்கமம் மற்றும் சங்கிலி துறை பகுதியில் கடல் கரையில் இருந்து சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தன. கடலுக்கு அடியில் காணப்படும் புற்பூண்டுகளும் தெரிந்தன. மேலும் திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள படித்துறையும் முழுமையாக வெளியே தெரிந்தது.