நாகர்கோவில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவுக்கு குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு,
கொரோனா தொற்று நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் குமரி மாவட்டத்திலேயே கொரோனா பரிசோதனை செய்வதற்கான உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சுகாதாரத்தை பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களுக்கும், ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போதுமான முகக்கவசம், கையுறைகள், கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 18 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரத சத்து நிறைந்த உணவாக மீன் உணவு உள்ளது. குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் தினசரி உணவாக மீன் உணவையே எடுத்து வருகின்றனர். மேலும் கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள், மீன்பிடி தடைக்காலம் என ஆண்டில் பல மாதங்கள் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மீனவர்களின் தொழில் மேலும் நலிவடைந்து அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், விசைப்படகுகள் தவிர வள்ளங்கள், சிறிய படகுகளில் சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல் குமரி மாவட்டத்திலும் மீன் பிடிக்கவும்,அவற்றை அதிக அளவில் கூட்டம் சேராதவாறு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.