tamilnadu

மணல் கடத்தல்காரர்களுடன் பேரம் பேசியதாக காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் பணி நீக்கம்

நாகர்கோவில்:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் மணல் கடத்தப்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில் தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க 33 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. இங்கு 24 மணி நேரமும்காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளில் காவல் துறையினர் அலட்சியமாக இருப்பதை தடுக்கும் வகையிலும் குமரி மாவட்டத்துக்குள் முறைகேடாக மணல் கொண்டுவருவதை தடுக்கவும் காவல்துறைசார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. கடந்த 2017 ஆம்ஆண்டு உதவி ஆய்வாளர் செந்தில்வேல் தலைமையில்பறக்கும்படைசெயல்பட்டு வந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இவர்கள் ஆரல்வாய் மொழி சாவடி அருகேபாண்டிச்சேரியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த லாரியை மடக்கினர். அந்த லாரியில் முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி செந்தில்வேல் தலைமையில் அந்த லாரியை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். உடனேவழக்கு பதிவு செய்யாமல் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக  இருந்த வனிதா ராணியும் வழக்கு பதிவு செய்யவில்லை. திடீரென 3 நாட்களுக்கு பின்னர் லாரியை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து அபராதம் விதிக்கவைத்து விடுவித்தனர். இந்நிலையில் மணல் கொண்டு வந்தவர்தன்னிடம் முறையான ஆவணங்கள் இருந்தும் காவல் துறையினர் பணத்துக்காக தன்னிடம் பேரம் பேசியதாக கூறி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்.இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தர்மராஜன், உதவி ஆய்வாளர் செந்தில்வேல் உள்ளிட்டோரை பறக்கும் படையில் இருந்து விடுவித்ததோடு  அந்த பறக்கும் படையையும் கலைத்தார். 

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புகாவல் துறையினர் இது தொடர்பான விசாரணை நடத்தினர். பறக்கும் படையில் இருந்த காவல் துறையினரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். அவர்களின் செல்போன் அழைப்புகளும் சோதனை செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை லஞ்சஒழிப்பு காவல் துறையினர் மூலம் டி.ஜி.பிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதில் பேரம்பேசப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக ஆய்வாளர் வனிதா ராணி,  பறக்கும் படைஉதவி ஆய்வாளராக இருந்த செந்தில்வேல், ஏட்டுகள் ரமேஷ்,ஜோஸ் ஆகிய 4 பேரை காவல்துறை பணியில் இருந்து நீக்கம் செய்து டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.