tamilnadu

சாதி ஆணவ ஊர் விலக்கலால் துயரம் கொள்ளிடம் அருகே இறந்த தாயின் உடலை வீட்டருகே புதைத்த நபர்

சீர்காழி, ஜூன் 22- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பழனிவேல் (50), கூலித் தொழிலாளி. 10 வருடங்களுக்கு முன்பு முருகேசன் இறந்து விட்ட நிலை யில் தாய் பேபி (80), பழனிவேல் வீட்டிற்கு பக்கத்தில் தனியாக ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த வருடம் பழனி வேலின் மகள் ஒருவர், வேறு சமூகத்தை  சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு சென்றதால் பழனி வேல் குடும்பத்தினரை கிராம மக்கள் புறக்கணித்து ஊரை விட்டு விலக்கி வைத்தனர். யாரும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வது கிடையாது. இதனால் பழனிவேல் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.  இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பேபி மேலும் உடல் நலனின்றி கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு இறந்தார்.

தாயின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் யாரும் வர மாட்டார்கள். இத னால் தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. இறுதி சடங்கிற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதால் பழனிவேல் செய்வதறியாது வீட்டுக்கு பக்கத்திலேயே மனைவி சாந்தாவின் உதவியுடன் குழி தோண்டி தாய் பேபியை புதைத்து விட்டார். இந்த தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர், பேபியின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் மக்கள் விலக்கி வைத்ததால் வேறு வழியின்றி வீட்டுக்கு பக்கத்திலேயே இறந்த தாயின் உடலை புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.