tamilnadu

img

ஜன. 26 அன்று தமிழகம் முழுவதும் டிராக்டர் பேரணி.... பெ. சண்முகம்....

மயிலாடுதுறை:
வேளாண் விரோதச்சட்டங்களின் பிரச்சார பீரங்கியே எடப்பாடி பழனிசாமி தான் என தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்குற்றம்சாட்டினார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் நடைபெற்ற திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் 39.ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து :

500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து  ஒரு கூட்டமைப்பை உருவாக்கி விவசாயத்தை பாதுகாப்பதற்காக, வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நடத்தும் தொடர் போராட்டம்    55 நாட்களை கடந்து நடைபெறுகிறது. இந்திய வரலாற்றில் இதுபோன்ற போராட்டம் நடந்தது கிடையாது. இந்திய ஆட்சியாளர்களுக்கும் வேளாண் சமூகத்திற்கும் இடையே  மாபெரும்யுத்தமாக  நடைபெறும் போராட்டத்தை சிறுமைப்படுத்து வதற்காக விவசாயிகளை பாகிஸ்தானிகள், காலிஸ்தானிகள், சீனாக்காரன் தூண்டி விடுகிறான் என அவதூறாக பேசுகின்றனர். எப்படியாவது சீர்குலைத்து விடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு மோடி-அமித்ஷா கும்பல் செயல்படுகிறது.

அவர்களிடம் நான் கேட்கிறேன். நீங்கள் நவீன இரும்பு மனிதர்கள் தானே.  பாகிஸ்தான் நாட்டு காரனெல்லாம் உள்ளே வரும் வரை என்ன செய்து கொண்டிருந் தீர்கள்? எங்களை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என  பீற்றிக் கொண்டிருந்தவர்கள் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு முன் மண்டியிட்டுக் கிடக்கின்றனர். ஊடகங்களும் அப்போராட்டத்தை பஞ்சாப்,ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் என தவறாகசித்தரிக்கிறது. நாடு தழுவிய போராட்டத்தை சுருக்கி விடலாம், வீரியத்தை குறைத்து விடலாம் என மோடி அரசு நினைக்கிறது. தமிழகத்திலோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் விரோதச்சட்டங்களின் பிரச்சார பீரங்கியாக போகும் இடமெல்லாம் இச்சட்டம் ரொம்ப நல்லது என பேசுகிறார்.

கறை நல்லது என தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் போல. கை வலிக்க துவைப்பவனுக்கு தான் அது தெரியும். இச்சட்டத்தால் அரிசி கிலோ 500 க்கு விற்றாலும் நான் இலவசமாக வழங்குவேன் என கூற தைரியம் எடப்பாடிக்கு இருக்கிறதா?
அதேபோல மின்சார திருத்த மசோதா அமலானால் ஒரு தெருவிற்கு அம்பானியும்,மறு தெருவிற்கு அதானியும் மின்சாரம் விநியோகம் செய்து, தடையில்லா   மின்சாரம் வழங்குகிறோம் என மக்களை கொள்ளையடிப்பார்கள்.  மின் இணைப்பு இருந்தால் மாதந்தோறும் மரியாதையாக கட்டணத்தை கட்டி விட வேண்டும். ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு கட்டாயம் உண்டு என மின்சார திருத்தச்சட்டம் சொல்கிறது. இதற்கெல்லாம் எடப்பாடி என்ன சொல்கிறார்? 
இலவச மின்சாரத்தால்  11 லட்சம் குடிசைகளும், நாள்தோறும் விசைத்தறி நெசவாளர்கள் 750 யூனிட்டும், கைத்தறி நெசவாளர்கள் 100 யூனிட்டும்  பயன்படுத்தியது என்னவாகும்? 22 லட்சம் பம்புசெட்டுகளும் இயங்கவில்லை என்றால் வேளாண் உற்பத்தி என்னவாகும்?

கணக்கெடுப்பு என்னாச்சு
டெல்டா பகுதியில் ஜன -1 லிருந்து 18 வரை தொடர்கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்அழுகிபோய்விட்டன. 13ஆம்தேதி கணக்கெடுப்புக்கு உத்தரவிடுகிறேன்  என்று கூறிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகிவிட்டார்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரு வாரகாலமாகியும் ஊருக்குள் ஒரு காக்கா, குருவியும் காணவில்லை என அதிமுக காரர்களே கூறுகின்றனர். மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது பாதித்தபகுதிகளில் சென்று பார்வையிடலாம். ஆனால் அதற்கெல்லாம் நேரம் கிடையாது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் தொகுதியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற வேலையில் அமைச்சர்கள் உள்ளனர்.

ஒரு அமைச்சர் கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில் மாடு கன்று போட்டதை போய் பார்த்து வருகிறார். விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை பார்த்து ஆறுதல் கூற  தயாராக இல்லை. வருகிற 26 அன்று தமிழகம் முழுவதும் டிராக்டர் பேரணியை விவசாய சங்கங்கள் சார்பில் நடத்த உள்ளோம். அரசு சார்பில் எல்லா இடங்களிலும் குடியரசு தின அணிவகுப்பு  நடந்த பிறகே நாங்கள் அணிவகுப்பை தேசிய கொடியுடன் நடத்தவுள்ளோம்.  குடியரசு தினத்தை சீர்குலைக்கும் எண்ணம் எங்களுக்கு ஒரு போதும் கிடையாது. அனைத்து தரப்பு மக்களும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக வீதிக்கு வந்தால் தான்  தீர்வு வரும். தொடர் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்று கூறினர்.