கடந்த 2018-2019ம் நிதியாண்டின் ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி வந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிதியாண்டு 2018-2019 நேற்று முடிவடைந்த நிலையில் நாட்டின் வரி வருவாய் குறித்ததான அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 2018-2019ம் நிதியாண்டின் மொத்த வரி வருவாயாக 1,06,577 கோடி ரூபாய் அரசுக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டை விட 15.6 சதவிகிதம் அதிகம் என கூறப்பட்டுள்ளது. இதில் மத்திய வருவாய் 20,353 கோடி, மாநில அரசுகளின் வருவாய் 27,520 கோடி மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் 50,418 எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு ஈட்டப்பட்ட அதிக அளவிலான வருவாய் இதுவே எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிக விழுக்காட்டில் வரி விதித்ததன் மூலமே இந்த அரசு வருவாயை பெருக்கி உள்ளதாகவும், அதிக வரியினால் அத்தியாவசிய பொருள்களின் விலை சாமானிய மக்களின் கழுத்தை நெருக்குவதாகவும், மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இந்த அரசின் ஜிஎஸ்டி உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவில் அதிகம் எனவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.