tamilnadu

img

பாமகவில் நடப்பது பதவிச் சண்டை

பாமகவில் நடப்பது பதவிச் சண்டை   பெ.சண்முகம் விமர்சனம்

தூத்துக்குடி, செப். 11- பாமகவில் நடைபெறும் உள்கட்சி பிரச்சனைகள் கொள்கை அடிப்படையிலானவை அல்ல, மாறாக பதவி சண்டையே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிப்பதற்கு கடுகளவு கூட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தூத்துக்குடியில் வியாழனன்று கவின் செல்வகணேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “பாமகவில் பல மாதங்களாக தந்தை-மகன் இடையே யார் தலைவர், யார் நிறுவனத் தலைவர் என்ற போட்டி அரசியல் நடந்து வருகிறது. அடுத்த முதலமைச்சர் என்று டாக்டர் ராமதாஸால் முன்மொழியப்பட்ட அன்புமணி, இன்று அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது கொள்கை சண்டையல்ல, பதவி சண்டை. அக்கட்சித் தொண்டர்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். புதிய கட்சிகள் தொடங்கட்டும் என்ற ராமதாஸின் கருத்து குறித்து சண்முகம் கூறுகையில், “ஏற்கனவே நூறு கட்சிகள் உள்ளன. இது 101-வது கட்சியாக இருக்கும். தமிழகத்தில் பெரிய எந்த விளைவும் இருக்காது. கொள்கை அடிப்படையிலும் மக்கள் நலன் சார்ந்தும் இந்தச் சண்டை நடைபெறவில்லை. சுயநலம் மற்றும் பதவி அடிப்படையிலேயே இது நடைபெறுகிறது” என்றார். கடுகளவு கூட வாய்ப்பு இல்லை அதிமுகவிலும் இதேபோன்ற பிரச்சனைகள் நடைபெறுவது குறித்து கேட்கப்பட்டதற்கு, “ஏற்கனவே நான்கு பிரிவுகள் உள்ளன. செங்கோட்டையுடன் ஐந்தாவது பிரிவாக வந்துள்ளார்” என்றார். அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக விமர்சனம் எழுவது குறித்து, “பாஜக மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது” என்றார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துகள் குறித்து சண்முகம் கூறுகையில், “கடுகளவு கூட அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.