tamilnadu

img

மு.க.ஸ்டாலினுக்கு தீக்கதிர் வாழ்த்து....

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் மதுக்கூர்இராமலிங்கம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு தீக்கதிர் நாளேட்டின் சார்பில் தோழமைப்பூர்வ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களது தலைமையின் கீழ் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் ஆக்கப்பூர்வ வளர்ச்சியை எட்டும் என்று உறுதியாக நம்புகிறோம். “மழை, வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி-ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத்துறையினர் அனைவருமே தமிழகத்தின் முன்களப் பணியாளர்களாகப் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள், அவர்களுக்கும் உரியமுறையில் வழங்கப்படும்” என்ற தங்களுடைய முதல் அறிவிப்பு வரவேற்புக்குரியது. உங்களது தலைமையில் அமையவுள்ள ஆட்சியின் நல்ல துவக்கமாக இந்த அறிவிப்பு உள்ளது. 

டாக்டர் கலைஞர் எத்தகைய உயரிய பொறுப்பில் இருந்தாலும், தம்மை ஒரு பத்திரிகையாளராக கருதுவதிலேயே பெருமை கொள்வார். அதே அணுகுமுறையோடும், கரிசனத்தோடும் ஊடகத் துறையினரை தாங்கள் மதிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தங்களது சீரிய தலைமையில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி என தமிழகம் பின்பற்றி வந்துள்ள பாரம்பரிய விழுமியங்களுடன் தமிழகம் தலைநிமிரட்டும் என்று தீக்கதிரின் சார்பில் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.