மதுரை,அக்.17- நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்ட தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யாவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர். முன்னதாக உதித்சூர்யா தனக்கு முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந் தார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரது முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மாணவர் உதித்சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், முறைகேட்டில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால், மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்க மறுத்து, ஜாமீன் மனுவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினசரி காலை 10.30 மணிக்கு உதித்சூர்யா ஆஜராக நிபந்தனை விதித்தார். உதித்சூர்யாவின் வயதையும் வருங்காலத்தை யும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் கிடைத்ததுபோல் உள்ளது என்று நீதிபதி கூறினார்.