tamilnadu

img

மாநில திட்டக் குழு அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு

மாநில திட்டக் குழு அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு

சென்னை, அக்.15 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் செவ்வாயன்று (அக்.14) தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக் குழுவின் நான்கு முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. துணை முதலமைச்சரும் திட்டக்குழு வின் அலுவல் சார் துணைத் தலைவருமான உதய நிதி ஸ்டாலின் மற்றும் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் இந்த அறிக்கைகளை ஒப்படைத்தனர். வெற்றிக் கணக்கெடுப்பு கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் வாழும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பயனாளிகள் பெறும் தொகையை முக்கியமாக மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்துவதாகவும், கணிசமான பகுதி தரமான உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகப் பயன்படுத்து வதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி யுள்ளதோடு, குடும்பத்தில் அவர்களின் மதிப்பை வலுப்படுத்தியுள்ளது. குடும்பத்தின் பொருளாதார முடிவு களில் தங்கள் பங்களிப்பு அதி கரித்துள்ளதாகவும் பயனாளிகள் தெரி வித்துள்ளனர். திறன் மேம்பாட்டு சாதனைகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின் மதிப்பீட்டாய்வு கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரை நடத்தப்பட்டது. 52  பொறியியல் கல்லூரிகள் மற்றும் 72 பாலிடெக்னிக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்புக்குத் தேவையான நடைமுறைத் திறன்கள், சுய விவரத் தயாரிப்பு மற்றும் தொழில் சார்ந்த திறன்களைப் பெற்றுள்ள தாகவும், தொழில் நிறுவனங்களின் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சமமான தொழில் திறன் பயிற்சியால் அவர்களின் வேலைவாய்ப்புத் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. புத்தொழில் வளர்ச்சி சாத்தியங்கள் தேசிய அளவில் புத்தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, மின்வாகன உற்பத்தி, உயரிய தொழில்நுட்பவியல் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட 12 முக்கிய துறை வாரியான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. கேரளம், குஜராத், கர்நாடகா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் கொள்கைகளை விட தமிழ்நாட்டின் புத்தொழில் வளர்ச்சிக் கொள்கை விரிவானது என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.  சமநிகர் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திற னாளிகளை உள்ளடக்கிய சமமான தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலைத்தன்மையை அளவிடுதல் ஆகியவை முக்கிய சவால்களாக விளங்குகின்றன என்று அறிக்கை வலியுறுத்துகிறது. மேம்பாட்டுக் கொள்கைகள் தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக் கொள்கை அனைத்து வருமான பிரிவினருக்கும் மலிவு விலையில் தரமான வீட்டு வசதியை உறுதி செய்வதை நோக்க மாகக் கொண்டுள்ளது. சமூக சமத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, விளிம்புநிலை சமூகங்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கான வழிகாட்டுதல்களும் இதில் அடங்கியுள்ளன. தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை அனைத்து நகர்ப்புற வசதி களுடன் கூடிய நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களை உருவாக்க தனியார் துறை முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய தொலை நோக்குப் பார்வையுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், திட்டம், வளர்ச்சித் துறையின் செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான் மற்றும் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் எஸ்.சுதா ஆகியோர் உடனிருந்தனர்.