tamilnadu

img

செப்.30 - தமிழகம் முழுவதும் நில உரிமைப் போராட்டம்

செப்.30 - தமிழகம் முழுவதும் நில உரிமைப் போராட்டம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில சிறப்பு மாநாடு அறைகூவல்

திண்டுக்கல், ஆக. 14 - நில உரிமை - குடிமனை உரிமைக்கான மாநில சிறப்பு மாநாடு, செப்டம்பர் 30 அன்று  தமிழகம் தழுவிய நில உரிமைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வீட்டுவசதி இல்லாத 40 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனையும், வீட்டு மனைப் பட்டாவும் வழங்குவதுடன், நில உச்ச வரம்பு சட்டத்தின் மூலமாக உபரி நிலங்களை கைப்பற்றி 20 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; குறிப்பாக 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை கண்டறிந்து - மீட்டு, அவற்றைப் பட்டியல் வகுப்பினருக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்த நில உரிமைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 30 அன்று, அனைத்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நில உரிமை - குடிமனை உரிமை சிறப்பு  மாநில மாநாடு வியாழனன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில், நடைபெற்ற இந்த  மாநாட்டில், மேற்கண்ட நில உரிமைப் போராட்ட த்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக மாநாட்டிற்கு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்.எல்ஏ., முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி வரவேற்றார். 

விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் விஜு கிருஷ்ணன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் அறிக்கை முன்வைத்தும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம் தீர்மானங்களை முன்மொழிந்தும் உரையாற்றினர். திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம்,  விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி. பெருமாள், மாநிலத் துணைத்தலைவர் பி. டில்லிபாபு, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ. லாசர், மாநிலப் பொருளாளர் ஆ.பழனிச்சாமி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி. பெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன், விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் என். பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் எம். செல்லையா, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. வசந்தாமணி, மாவட்டச் செயலாளர் கே. அருள்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் பி. செல்வராஜ், தா. அஜாய் கோஷ், தயாளன், ரவிச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மாநாட்டில் பங்கேற்றனர்.