மதுரை:
சாலைகள் எவ்வாறு தரநிர்ணயம் செய்யப்படுகிறது? இவற்றில் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன? என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,நெல்லை தரணி நகர் சாலையி லிருந்து, வாசுதேவநல்லூர் செண்பக வல்லி அணை பகுதியில் உள்ள தலை யானை வனத்துறை சோதனைச் சாவடி வரை சாலையை 8 மீட்டர் வரை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தேவை யற்றது. இதனால் அரசுக்கு நிதி இழப்பே ஏற்படும். ஆகையால், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் தேவையின்றி சாலை அமைப்பதில் முனைப்பு காட்டும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தனிக் குழுவை அமைக்க வேண்டும்.
இதுபோல் ஆலங்குளம், முக்கூடல்ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள புதுப்பட்டி, மருதம்புத்தூர், காதபுரம், வாணி வித்யாலயா பள்ளி ஆகிய பகுதி களில் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு சாலை மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்ய கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தமிழகம் முழுவதும் கிராமப்புறச் சாலைகள் நிலை குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் அமைக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும் சாலையை பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். எனவே, தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலைகளை சீரமைக்கவும், பராமரிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசார ணை வியாழனன்று நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி கள் கூறுகையில், சாலைகளின் தரநிர்ணயம் எவ்வாறு செய்யப்படு கிறது? அவை எவ்வாறு பராமரிக்கப்படு கின்றன? தரமற்ற சாலைகள் எந்த அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றன? இவற்றில் பின்பற்றப் படும் நடைமுறைகள் என்ன? என்பதுகுறித்து நெல்லை தேசிய நெடுஞ் சாலை துறை மண்டல பொறியாளர், தென்காசி நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்புத்துறை மண்டல பொருளாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.