வறுமையின் வலியை உணர்ந்த ஒரு இளம் உள்ளம், வசதியான வாழ்வை துறந்து மக்களுக்காக வாழ முடிவெடுத்த கணம் - அதுதான் பி.டி. ரணதிவேவின் வாழ்க்கைப் பயணத்தின் துவக்கம். 1904-இல் பம்பாயின் சமூக சீர்திருத்தக் குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளி நாட்களிலேயே தன் சிறு கையில் கிடைத்த காசுகளை தலித் மாணவர்களின் கல்விக்காக வழங்கிய மாபெரும் மனிதர். விமலா ரணதிவேயை வாழ்க்கைத் துணைவியாக பெற்ற அவர், இருவரும் இணைந்து வாழ்நாள் முழுவதும் புரட்சிப் பாதையில் பயணித்தனர். சகோதரி அகல்யா ரங்கனேகர், மைத்துனர் பி.பி. ரங்கனேகர் என குடும்பமே போராட்ட மையமாகத் திகழ்ந்தது. பம்பாய் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர், உயர் பதவிகளின் கனவுகளை உதறித் தள்ளி, தொழிலாளர்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்தார். 1929-இல் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் அவரது முதல் களம். சிறை வாசம் அவரது இரண்டாவது வீடு ஆனது. ஹைதராபாத் சிறையின் இருண்ட அறையில், விளக்கின்றி இருட்டில் கிடந்தபோதும், மார்க்சின் ‘மூலதனம்’ நூலை படித்து முடித்த உறுதி! இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து சிறை சென்றபோதும் அவர் தளரவில்லை. ‘நேஷனல் பிரண்ட்’ இதழில் எழுதிய ஒவ்வொரு வரியும் சுதந்திரத்தின் விதைகளாக விழுந்தன. இரண்டாம் உலகப் போரின் போது சிறையில் இருந்தபடியே ‘மக்கள் யுத்தம்’ என்ற வரலாற்று ஆவணத்தை எழுதி, கட்சியின் திசையை மாற்றியவர். 1946-ல் கடற்படை வீரர்களின் எழுச்சியின் போது இரவு பகலாக உணவு பொட்டலங்களை அனுப்பி, போராட்டத்திற்கு உயிரூட்டியவர். சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கம் வெற்றி பெற காரணமானவர். சிஐடியு-வின் முதல் தலைவராக தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். “6 கோடி தீண்டாதவர்கள்”, “மார்க்சியப் போதனைகள்” என ஏராளமான நூல்கள் எழுதி, அறிவொளி பரப்பியவர். 1962-ல் இந்திய-சீன போரின் போது குடும்பத்துடன் சிறை சென்றார். நண்பர் பருலேக்கர் சிறையிலேயே உயிர் நீத்தார். நான்கு ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பின்னும் தளராத மனஉறுதியுடன் வெளியே வந்து போராடினார். கடைசி மூச்சு வரை களத்தில் நின்றவர். 1989 டிசம்பரில் மதுரையில் கடைசி பொதுக்கூட்டம். புற்றுநோய் தாக்கியபோதும், மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே ‘சோவியத் நாடுகளின் பின்னடைவு’ குறித்த ஆவணத்தை எழுதி முடித்தார். 1990 ஏப்ரல் 6-ல் இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதர். 62 ஆண்டுகள் - ஒவ்வொரு நாளும் மார்க்சியத் தத்துவத்திற்காக, மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த வாழ்க்கை. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக சிந்தித்த சிந்தனையாளர். “முன்பு விஞ்ஞானம் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு உதவியது. இன்று விஞ்ஞானமே ஒரு உற்பத்திச் சக்தி” என்ற அவரது கடைசி கால எச்சரிக்கை இன்றும் ஒலிக்கிறது. தன் சொந்த வாழ்வை துறந்து, மக்களின் விடுதலைக்காக வாழ்ந்த இந்த மகத்தான மனிதரின் வரலாறு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொன்னேடுகளில் என்றென்றும் பொலிவுடன் திகழும்.