“காஷ்மீர் பள்ளத்தாக்கில் கனிமரங்களை வளர்த்துவிட்டு
சகாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்கிறோம்”
- கவிஞர் இன்குலாப்
உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டுகிற உழைப்புச் சுரண்டலை இன்குலாப் தனது கவிதையில் அழகியலுடன் விளக்கியுள்ளார். இந்தியாவில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்நிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள “இன்றைய இந்தியா - மூன்று ஆய்வறிக்கைகள்” என்ற நூல் விளக்குகிறது. நவதாராளமய பொருளாதாரக் கொள்கை அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; கடுமையான பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழில், விவசாயம், நடுத்தர மக்கள், நகரமயம் ஆகிய தளங்களில் நவதாராள மயத்தின் அமலாக்கத்தால் உழைக்கும் மக்களின் வாழ்நிலையிலும், வாழ்க்கைத் தரத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூன்று வல்லுநர் குழுக்களை அமைத்தது. இந்தக் குழுக்கள் தயாரித்த அறிக்கையை, தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
கிராமப்புற இந்தியா
இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் (2015) பேர் ஊரகப் பகுதிகளில் வாழ்கிறார்கள். விவசாயப் பிரச்சனை, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியாக உள்ளது. விவசாயிகள் ஒரே வர்க்கமாக இல்லை. பன்முகத் தன்மை கொண்டவர்களாகப் பல வகையாகப் பிரிந்து சமூக, பொருளாதார வர்க்கங்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். நிலப்பிரபுக்கள் – முதலாளித்துவ பெருவிவசாயிகள் நடுத்தர விவசாயிகள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக உடலுழைப்புத் தொழி லாளர்கள் என பல வர்க்கங்களையும் உள்ளடக்கியது தான் இன்றைய கிராமப்புற இந்தியா. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமலாக்கப் பட்டு வரும் நவதாராளமய பொருளாதாரக் கொள்கை, ஊரகப் பகுதிகளில் அதிவேகமான சிக்கலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
n கார்ப்பரேட் துறை, கிராமப்புற பணக்காரர்களின் தேவைக்காக நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் விளைவாக, விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் விவசாயத்தில் இருந்து வெளியேற்றப்படுவது அதிகரித்து வருகிறது. n விவசாய சாகுபடிக்கான இடுபொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. அனைத்து விதமான உரங்கள், விதைகள், பயிர்ப் பாதுகாப்பு வேதிப்பொருட்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் விநியோகத்தில், உள்நாட்டு-பன்னாட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. n விவசாய விளைபொருட்களுக்கு நியாய விலை வழங்குவதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை சட்ட உத்தரவாதமாக்க ஒன்றிய அரசாங்கம் மறுத்து வருகிறது. n விவசாய விளைபொருட்களைச் சேமிப்பதும், சந்தைப்படுத்துவதும் தனியார்மயமாகி வருகிறது. n விவசாய வளர்ச்சி உள்ளிட்டு ஊரக வளர்ச்சிக்கான அரசின் நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. n விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது. n தேசிய தாவர உயிரியல் செல்வங்களைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகளை விரிவாக்கம் செய்வதற்கான கட்டமைப்புகளை ஒன்றிய அரசு அழித்து வருகிறது. n நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் உழவு, நடவு, களையெடுத்தல், அறுவடை ஆகிய அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் வெகுவாகக் குறைந்துவருகின்றன. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆறுத லாக இருந்துவரும் ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு தொடர்ந்து அழித்து வருகிறது. n விவசாய உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கங்களின் கடைக்கோடியில் இருப்பது விவசாயத் தொழிலாளர் வர்க்கம் ஆகும். இவர்கள் வேலை தேடி நகர்ப்புறங் களுக்கு இடம்பெயர்வது அதிகமாகி வருகிறது. நகர்ப்புறங்களில் குடியேறும் இவர்களுக்கு வாழ்விடம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக இருக்கின்றன.
நிலப்பிரபுக்கள் - முதலாளித்துவ பெருவிவசாயிகள்
விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நவதாராளமயக் கொள்கையினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். அதே நேரத்தில், கிராமங்களில் நிலப்பிரபுக்களும் - முதலாளித்துவ பெரு விவசாயி குடும்பங்களும் ஆளும் வர்க்கமாக உள்ளனர். கிராமங்களில் உள்ள வளமான நிலங்கள் இவர்களது உடைமையாக உள்ளன. நிலப்பிரபுக்கள் - முதலாளித்துவ பெருவிவ சாயிகள் உருவான பின்னணியில் வேறுபாடு இருந்தா லும், சொத்துக் குவிப்பதிலும், உபரியை அபகரிப்பதி லும் நவதாராளமயக் கொள்கைகளால் பலன டைந்துள்ளனர். கிராமப்புற இந்தியாவில் இவர்கள் தான் அரசாட்சியின் ஒன்றிணைந்த ஒரே தூணாக இருக்கிறார்கள். இவர்களைக் குறித்து ஆய்வறிக்கை கூறுவதை பார்ப்போம்: அரசின் விவசாயக் கொள்கைகளின் பயனாளிகளாக வும் அவர்களே இருக்கிறார்கள். சம்பளத்துடனான வேலை வாய்ப்புக்கள், வணிகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், பிற தொழில்கள் உள்ளிட்ட பல வகைகளில் சம்பாதித்து அவற்றை கிராமத்தில் முதலீடு செய்கிறார்கள். கிராமங்களில் இவர்களுடைய ஆதிக்கம் நிலத்தை மையப்படுத்தியதாக மட்டும் இல்லை. செல்வம் கொழிக்கும் பிற தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள். வட்டிக்கு விடுவது, அரவை ஆலைகள், பால் பண்ணைத் தொழில் ஆகியவற்றுடன் தானிய விவசாயம், தோட்டப்பயிர்கள், வேளாண் இயந்திரங்களின் விற்பனை – வாடகை, உதிரி பாக உற்பத்தி, பட்டு ஆகிய சரக்குகளின் வர்த்தகம், ஊக வணிகம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், சினிமா திரையரங்குகள், பெட்ரோல் பம்புகள், தங்கும் விடுதிகள், போக்குவரத்து வசதிகள், கல்வி நிறுவனங்கள் நடத்துவது போன்றவை அவர்களுடைய வருமானத்திற்கும், அதிகாரத்திற்கும் மூலாதாரங்களாக உள்ளன. இத்தகைய குடும்பங்கள் உள்ளாட்சி அமைப்பு களிலும், அதற்குமேல் சட்டமன்றங்கள், அதிகார வர்க்க வட்டங்கள், காவல்துறை மற்றும் அரசுத் துறைகளில் நுழைவதற்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். உயர்கல்வி, நவீன முறைசார்ந்த வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களே முதலாளித்துவ கட்சிகளின் நிர்வாகப் பொறுப்புகளிலும் உள்ளார்கள். இந்த வர்க்கம் தான் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுடைய கிராமப்புற அதிகாரத்தின் மையத் தூணாக உள்ளது. கிராமங்களின் வாக்குகளை பெற்றுத் தருவதற்காக கட்சிகளால் நாடப்படும் வர்க்கமாகவும் இது அமைந்துள்ளது.
சுரண்டல் வர்க்கம்
இந்த வர்க்கம், கிராமங்களில் உள்ள மற்ற வர்க்கங்களை நேரடியாக பல வழிகளில் சுரண்டக்கூடிய தாகும்: கூலியில் சுரண்டல், வாடகை மூலம் உறிஞ்சுதல் வட்டிக்கடன், விவசாயப் பண்டங் களைச் சேமிக்கும் கிடங்குகள் மற்றும் வர்த்தகம் செய்வதில் சுரண்டல், நிலவுடைமையில் ஆதிக்கம் செய்வதுடன் கிராமத்தில் உள்ள அரசு நிறுவனங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. கடன் வசதிகளையும், விவசாய இடுபொருட்களையும் பெறுவதிலும், பள்ளிக்கல்வி, உயர் கல்விகளில் முன்னுரிமை பெறும் வழிகளிலும், அமைப்பு ரீதியான துறைகளின் வேலை வாய்ப்புக்களைப் பெறுவதிலும் மேம்பட்ட திறன் படைத்ததாக இருக்கிறது. நிலப்பிரபுக்களும் – முதலாளித்துவ பெரு விவசாயிகளும், கிராமத்தின் பொரு ளாதாரத்திலும், பாரம்பரிய, நவீன, சமூக - அரசியல் படிநிலைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “கட்சித் திட்டத்தில்” மேற்கண்ட அம்சங்களைப் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “விவசாயத் துறையில் அரசு வழிநடத்தும் முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக கிராமப்புற பணக்காரர்களான நிலப்பிரபுக்கள், முதலாளித்துவ விவசாயிகள், பணக்கார விவசாயிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அடங்கிய பிரிவினருக்கும், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களும் அடங்கிய பெரும்பகுதி கிராமப்புற மக்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்து வருகிறது” விவசாய வர்க்கங்களைப் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சித் திட்டத்தின் நிர்ணயிப்புகளையே ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்துகிறது. மேலும், நவதாராளமயக் கொள்கைகளால் இந்த வர்க்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது எடுத்துக் காட்டுகிறது:
“இந்தியாவின் ஊரக மக்கள் தொகையில் மேல் மட்டத்தில் உள்ள 5 சதவீதமான நிலப்பிரபுக்கள் – முதலாளித்துவ பெரிய விவசாயிகளின் வர்க்க அதிகாரத்தை அழிக்காமல் மக்களின் வளர்ச்சிக்கான அடிப்படைக் கடமைகளை நம்மால் நிறைவேற்ற முடியாது. வர்க்க, சாதி, பாலின மற்றும் இதர வடிவங்களி லான கொடூர ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்டவும் முடியாது.” விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் மீது இந்த வர்க்கங்களால் கிராம மட்டத்தில் நேரடியாக நடத்தப்படும் பொருளாதார, சமூக-அரசியல் ரீதியிலான சுரண்டலானது, பிராந்தியங்களுக்கு இடையில் வேறுபடுகிறது. நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ பெரு விவசாயிகளின் வர்க்கங்கள் மக்களை நேரடியாகச் சுரண்டும் ஒடுக்குமுறை வடிவங்கள் பலவகையாக இருப்பதால், இந்த வர்க்கங்களுக்கு எதிரான நம்முடைய வெகுஜன அமைப்புகளின் முழக்கங்களும், இயக்கங்களும் வட்டாரத்தில் நிலவும் திட்டவட்டமான நிலைமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு வகுக்கப்பட வேண்டும். இந்திய விவசாயப் பிரச்சனையின் பிரிக்கவியலாத அங்கமாக சமூகப் பாகுபாடு, ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவை அமைந்துள்ளன. சமூகப் பாகுபாட்டிற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக, துடிப்பான சமரசமற்ற போராட்டங்களை நடத்தியபடியே, உழைக்கும் மக்களின் ஒற்றுமையை நாம் கட்டமைக்க வேண்டும்.
வர்க்கங்கள் குறித்து மாசேதுங்
“புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார் நமது நண்பர்கள்?” என்பதே ஆகும். உண்மையான எதிரிகளிடமிருந்து நண்பர்களை பிரித்தறிய சீன சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார நிலைமையையும் உற்பத்தியில் அவர்கள் வகிக்கும் பங்கு பற்றியும் பகுப்பாய்வு செய்வது அவசியம்” என்கிறார் மாசேதுங். அதைப்போலவே, இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கங்கள் குறித்தும், உழைக்கும் வர்க்கங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சித் திட்டம் தெளிவாக விளக்குகிறது. நவதாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் பற்றி “இன்றைய இந்தியா - மூன்று ஆய்வறிக்கைகள்” என்ற நூல் விளக்குகிறது. இந்நூலை முழுமையாக வாசிப்பதன் மூலமே விவசாயம், தொழில், நடுத்தர வர்க்கம் மற்றும் நகரமயத்தில் நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும், பாதிப்பையும் புரிந்துகொள்ள முடியும் - களப்போராட்டத்தை நடத்த முடியும்.