திருச்சி பெல் நகரியத்தில் வாழும் வள்ளுவம் நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி, அக். 12- உலக பொதுமறையாம் திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், முத்தமிழ் மன்றம் சார்பில் பெல் நகரியத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியளவில் திருக்குறள், அதிகாரம், குறள் எண்,பொருள் கூறும் வாழும் `வள்ளுவம் நிகழ்ச்சி’ தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை பெல் பொது மேலாளரும், முத்தமிழ் மன்ற தலைவருமான சமுத்திர பாண்டி தலைமை வகித்து, துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் அமிர்த ஜெயபால் இந்நிகழ்வின் நோக்கம் குறித்து பேசினார். மூத்த ஆலோசகர்கள் துரைராஜ், நாகராஜன் வாழ்த்துரை வழங்கினர். இதில் உறுப்பினர்கள், ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு திருக்குறள் அதிகாரம் பொருள் ஆகியவற்றை விளக்கிக் கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஒருங்கிணைப்பு செயற்குழு உறுப்பினர் காளிராஜ் செய்திருந்தார். முன்னதாக, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அமைப்பு செயலாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.