tamilnadu

img

பாஜகவின் பாசிச சித்தாந்தங்களை முறியடிக்க இடதுசாரி அரசியலே தீர்வு - உ.வாசுகி

பாஜகவின் பாசிச சித்தாந்தங்களை முறியடிக்க இடதுசாரி அரசியலே தீர்வு

கேரளா, திரிபுரா, மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆட்சிகள் மக்களுக்கு சமூகநீதியும் சமத்துவமும் வழங்கியுள்ளன. சோவியத் யூனியனில் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.  இன்று பாஜக அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை மாற்றி, தேர்தல் சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயல்கிறது. மாநில அரசியல் சூழல்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எப்படித் தெரியும்? இது அவர்களுக்கு சிக்கலை உருவாக்கும்.  பாஜக தங்கள் வெற்றிக்காக கடவுள், மதம், நலத்திட்டங்கள் என எதையும் பயன்படுத்துகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இவை பலனளிக்காததால் பாஜகவினர் தேர்தல் மோசடிகளை நாடுகின்றனர். தேர்தல் ஆணையம் மூலம் வாக்குரிமையை மாற்ற முயற்சிப்பதாகவும், நூறாண்டுகளுக்கு முந்தைய பிற்போக்கு நிலையை மீண்டும் கொண்டுவர முயல்வதாகவும் தெரிகிறது.  சீனா குவாண்டம் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பில் முன்னேறி வரும்போது, பாஜக அரசு “கோமியம் குடித்தால் நல்லது” என்று பேசுகிறது. தேசிய கல்விக்கொள்கை மூலம் மனுவாத திட்டத்தை முன்னெடுத்து, சமூகநீதியையும் பெண்கல்வியையும் சீர்குலைக்கின்றனர். குலக்கல்வி முறையையும் சட்டப்படி தடை செய்யப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறையையும் பின்வாசல் வழியாக மீண்டும் கொண்டுவர முயல்கின்றனர்.  “நகர்ப்புற நக்சலைட்” என்ற பெயரில் போராடும் அமைப்புகளை தடை செய்யவும், மோடிக்கு எதிராக பேசுபவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கவும் முயல்கின்றனர். சாதி ஒழிப்பு பற்றி பேசினால் தேசதுரோகம், மக்கள் விரோத நடவடிக்கைகளை விமர்சித்தால் தேசதுரோகம் என்று முத்திரை குத்தப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கின்றனர்.  மனுவாத சித்தாந்தம் பெண்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்கிறது. வரதட்சணை கொலைகளிலும் பெண்கள் மீதான வன்முறையிலும் பாஜக தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள்? திருப்பூரில் ரிதன்யா தற்கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களில் ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ந்து களத்தில் நிற்கிறது.  அமெரிக்க வரியால் கோவை-திருப்பூர் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசை விமர்சிப்பவர்கள் இதுபற்றி பேசாமல் மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள்? மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால்,  பாஜகவின் பிற்போக்குக் கொள்கைகள், சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள், சொத்து வரி உயர்வு பற்றியும் குரல் எழுப்ப வேண்டும்.   இடதுசாரி அரசியலே பாஜகவின் பாசிச சித்தாந்தங்களை முறியடிக்கும் உண்மையான தீர்வு. மாதர் சங்க கோவை மாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து.