மதுரை:
கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு பெரிதும் காரணமான கோயம்பேடு மார்க்கெட் தொடர்பில் உள்ளவர்களாலேயே அதிகளவு பரவியது.
மகாராஷ்ட்டிராவில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு லோடு ஏற்றி பல லாரிகள் மதுரை, சென்னை வந்து சென்றுள்ளன. இதில்வந்த ஓட்டுநர்கள், சில சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது ஏனெனில் இந்தியாவில் அதிகம் பாதிப்பு கொண்ட முதல் மாநிலம் மகாராஷ்ட்டிராஆகும். அங்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 900 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரையில் கடந்த சிலநாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 157 பேர், 138பேர், 97 பேர் என பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பரவை காய்கறிமார்க்கெட்டும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.அங்கு வியாபாரிகள், சுமைப்பணி தொழிலாளர்கள், விவசாயிகள் என தினமும் பல நூறுபேர் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன் 15-ஆம்தேதி முதல் மூடப்பட்ட பரவை மார்க்கெட், நான்குஇடங்களில் கடைகள் செயல்பட்டு வந்தன. சமீபத்தில் மதுரையில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் பரவை மார்க்கெட் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்பட்டதால், மார்க்கெட்டில் பணியாற்றி வரும் அனைவரையும் சோதனையிட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார். அதன்படி, ஏற்கனவே20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1009 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில்மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரவை மார்க்கெட்டில் நடப்பது என்ன?
பரவை மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், “ பரவை மார்க்கெட்டில் கொரோனா சோதனை செய்ததில் சிலருக்கு தொற்று இருந்தது உண்மைதான். அதைமறுப்பதற்கில்லை. இதையடுத்து மொத்த மார்க்கெட் பூட்டப்பட்டு வெவ்வேறு இடங்களில்மிகப்பெரிய பரப்பளவில் சந்தை இயங்கிவருகிறது. இந்தச் சூழலால் பரவை மார்க்கெட் டில் தொற்று பரவுகிறது. இது ஹாட்ஸ்பாட்டாக மாறுகிறது என்பதில் உண்மையில்லை. இது திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு செய்தி. பரவை சந்தையில் கிலோ 12 ரூபாய்க்கு விற்ற கேரட் மாட்டுத்தாவணி சந்தையில் ரூ.50-க்கு விற்கப்படுகிறது, பீன்ஸ், பட்டர்பீன்ஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் மும்மடங்கு விலைக்கு விற்கப்பட்டுவருகிறது. இதை கண்காணிக்க ஆளில்லை. கொடைக்கானலில் உள்ள சில விவசாயிகள் போதுமான விலை கிடைக்கவில்லை. காய்கறிகள் செடி, கொடிகளிலேயே அழுகிவருகின்றன என்று எங்களிடம் கதறுகின்றனர்.என்னசெய்வதென்று தெரியவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய லாரிகளும் வரவில்லை. சில விஷயங்களை வெளியேசொல்ல முடியாமல் நாங்கள் தவிக்கிறோம். குறிப்பாக, இந்தத் தகவலை பகிர்ந்து கொள் ளும் எனக்கே கொரோனா இருப்பதாக பட்டம்கட்ட முயற்சி நடக்கிறது” என்றார் வேதனையுடன்.
காய்கறி மொத்த வியாபாரியின் கூற்றுப்படி,கொரோனாவைக் காட்டி காய்கறி வியாபாரத்தில் பெரும் கொள்ளை நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஊரடங்கு மே 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுமா? தொடருமா? எனத் தெரியாத நிலையில் மதுரை மக்களுக்கு அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் காய்கறிவாங்குவதற்கே சரியாய்போகும் என்பது மட்டும்உறுதி. குறைந்தவிலையில் காய்கறிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?