tamilnadu

இன்று பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா துவக்கம்

இன்று பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா துவக்கம்

சென்னை, ஆக. 11 - கியூபப் புரட்சியின் மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி செவ்வாயன்று (ஆக.12) சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சோசலிசக் கியூபாவை காப்போம், ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம், பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா தொடக்கம் ஆகிய நிகழ்வுகள் செவ்வாயன்று  (ஆக.12) ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது. கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழுவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவும் இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றன. இதுதொடர்பாக கியூபா ஒருமைப்பாட்டுக் குழு மாநிலத் தலைவர் திரைக் கலைஞர் ரோகிணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபா பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளது. சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கியூபாவுடன் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் இருந்து நிதி சேகரித்து வழங்குகிறோம். கியூபா மீதான பொருளாதாரத் தடையை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக  கியூபாவிற்கு இந்நிதி அளிக்கப்படுகிறது” என்றார். “அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உலக நாடுகள் அனைத்தும் ஆதரித்தன. ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது. சோசலிசத்தை காக்க நிதி நெருக்கடியில் உள்ள கியூபாவிற்கு தெருக்களில் உண்டியல் வசூல் செய்து கொடுக்கிறோம்” என்று ஒருமைப்பாட்டுக் குழுவின் மாநில பொதுச் செயலாளர் ஐ.ஆறுமுகநயினார் கூறினார். “இந்நிகழ்வில் கியூப தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், பத்திரிகையாளர் என்.ராம், கமல்ஹாசன் எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்” என்று ஒருமைப்பாட்டுக் குழு பொருளாளர் சி.பி.கிருஷ்ணன் கூறினார்.