இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களை முடக்கக்கூடாது என வலியுறுத்தி குடிநீர்சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. குடிநீர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மலைராஜன், சிஐடியு மாவட்டசெயலாளர் எம்.சிவாஜி, கிடாத்திருக் கை, கீழாம்பால், லாந்தை, நல்லிருக்கை, உத்திரகோசமங்கை, எட்டிவயல், பனைக்குளம் ஆகிய ஊராட்சித் தலைவர்கள், 15- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நரிப்பையூர், இராமேஸ்வரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கிடாத்திருக்கை, கீழாம்பல், கீழப்பருத்தியூர், பனைக்குளம், உத்திரகோசமங்கை, பொட்டகவயல், பெருங்குளம், சிக்கல், சேரந்தை, உரத்தூர், கருமல், கரிசல்புளி, நல்லிரிக்கை ஆகிய ஊர்களில் உப்புத் தண்ணீரை நன்னீராக்கும் திட்டமும் செயல்படுகிறது.தற்போது இந்தத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் நிலை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் முடக்கப் பட்டால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ளது என்றார்.