நில மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்'
கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கீழப்பழுவூர் கிராமத்தில், அடகு வைத்த நிலத்தை திரும்பிக் கேட்ட நில உரிமையாளர் சந்திரோகன் மனைவி தேவிபாலாவை, சாதிப் பெயரைச் சொல்லி, நிலத்தை கொடுக்க மறுத்து கொலை வெறிதாக்குதல் நடத்திய வேல்முருகன் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும். கடந்த 18.2.2025 அன்று அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடமிருந்து நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அ. அருண்பாண்டியன் தலைமை வகித்தார். திருமானூர் ஒன்றியச் செயலர் எஸ்.பி. சாமிதுரை முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா, மாவட்டச் செயலர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, அருணன், மூத்த தலைவர்கள் சிற்றம்பலம், சௌரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.