சிறு-குறு தொழில்கள் தமிழகம் உட்பட இந்தியாவில் தொழில்துறையில் வேலை அளிப்பதில்
முதன்மை பாத்திரம் வகிக்கிறது.நமது மாநிலத்தில் மட்டும் தொழில்முனைவோர் அதில்
பணியாற்றுவோர் என சுமார் 2 கோடிக்கும் அதிகமானோருக்கான வாழ்வாதாரமாக இது
விளங்குகிறது. பெரு நிறுவனங்கள் பெரும்பாலும் சில இடங்களிலேயே
மையப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சிறு-குறு தொழில்கள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளதால்
அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு அனைத்து தரப்பினருக்கும்
வேலைவாய்ப்புகளை அளிக்கும் பகுதியாகவும், அதேசமயம் உள்ளூர் அளவில் பொருளாதார
நடவடிக்கைகளில் ஒரு ஆதாரமாகவும் விளங்குகிறது.
நவீன தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு குறிப்பாக, பண மதிப்பிழப்பு,
ஜி.எஸ்.டி. அமலாக்கப்பட்ட பிறகும், கொரோனா பேரிடர் தாக்குதலுக்குப் பின்னரும் சிறு-குறு
தொழில்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதோடு ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி.யில்
கார்ப்பரேட்டுகளுக்கு இணையாக சிறு-குறு தொழில்களை வைத்ததும், வங்கி கடன் தள்ளுபடி,
வட்டி தள்ளுபடி, கால நீட்டிப்பு, குறைப்பு ஆகியவற்றில் சிறு-குறு தொழில்களை பாதிக்கும்
முடிவுகளையே எடுத்துள்ளது. இவற்றோடு, மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு,
கண்காணிப்பதற்கு உருவாக்கப்பட்டிருந்த விலை கண்காணிப்பு கமிட்டி கலைக்கப்பட்டதும், சிறு-
குறு தொழில்களை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் சிறு-குறு தொழில்கள் வாழ்வா,
சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு முழுமையாக தன்னளவில்
சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிறு-குறு தொழில்களை பாதுகாக்க முடியும். இது தன்
அக்கறையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் முகமாக மாநில அரசாங்கம் பதவியேற்ற ஓரிரு
மாதங்களிலேயே சிறு-குறு, நடுத்தர தொழில்கள் மீட்புக்குழு ஒன்றை அமைத்து அந்தக்குழு
அறிக்கையையும் அளித்துள்ளது. வேலையின்மை மிக வேகமாக உயர்ந்து வரும் நிலையில்
பிரதானமாக வேலைவாய்ப்பை வழங்கும் சிறு-குறு தொழில்களை பாதுகாக்க கீழ்க்கண்ட
நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் 23வது தமிழ்நாடு மாநில மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
1. மூலப்பொருட்களுக்கு விலை கட்டுப்பாட்டு கமிட்டியை அமைக்க வேண்டுமென ஒன்றிய
அரசை வலியுறுத்தும் அதே நேரத்தில் சிறு-குறு தொழில்களுக்கு நியாய விலையில்
மூலப்பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
2. மாநில அரசின் நிறுவனங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள்
தேவையில் குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தை சிறு-குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல்
செய்வதை கட்டாயமாக்குவதோடு உரிய காலத்தில் அவர்களுக்கு பணம் வழங்குவதை உறுதி
செய்ய வேண்டும்.
3. சிறு-குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறைகள் மாறியுள்ள பின்னணியில் குறு
நிறுவனங்களுக்கு 25 குதிரைத்திறன் சக்தி வரை படிநிலையின்றி ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.
3.50 என்கிற அளவிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
4. மாநில அரசு நடப்பு நிதிநிலை அறிக்கையில் வெவ்வேறு இனங்களில் திறன்
மேம்பாட்டிற்காக ரூ. 5203 கோடி ஒதுக்கியுள்ளது. திறன்மேம்பாடு தேவைப்படும் மாணவர்களை 6
மாதத்திற்கு குறு நிறுவனங்களில் திறனை மேம்படுத்துவதோடு குறு தொழில்களுக்கு
குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கு சில தொழிலாளிகளின் சம்பளத்தையும் கொடுப்பதாக அமையும்.
இதன் மூலம் திறன்மேம்பாடு, பணி வழங்குதல், குறுந்தொழில்களுக்கு உதவுவதல் என்று மூன்று
விதமான நோக்கங்கள் நிறைவேற்றப்படும். சுமார் ஒரு லட்சம் பேருக்கு ஆறு மாத காலத்திற்கு ரூ.
6000/- வீதம் செலவழித்தால் கூட ரூ. 360 கோடி மட்டுமே செலவாகும். இது ஒட்டுமொத்தமாக
ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 5203 கோடியில் 7 சதவிகிதம் மட்டுமே.
5. கடனால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியினருக்கு வட்டியில்லா கடன் கிடைப்பதற்கு ஏற்கனவே
வங்கிகளில் கடன் வாங்கி செயல்படா சொத்துக்களாகவும் இரண்டு மாதங்கள் கடன் தொகை
செலுத்தாத நிறுவனங்களுக்கும் அந்த தொகைகளை தமிழ்நாடு அரசு திருப்பிச் செலுத்த உதவி
செய்வதன் மூலம் ஒன்றிய அரசு அறிவித்துள்ள கடன் சலுகையை பெற்றுக் கொள்வதற்கு
வாய்ப்பாக அமையும். தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள சிறு-குறு தொழில்களுக்கான
கடன் திட்டத்தை இந்த வகையில் பயன்படுத்துவது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
தொழில்கள், வேலைவாய்ப்பு, திறன் மேம்படுத்துதல் பரவலான பொருளாதார நடவடிக்கை ஆகிய
அனைத்தும் உள்ளடக்கியதாக சிறு-குறு தொழில் பாதுகாப்பு அமைந்திருப்பதால் மேற்கண்ட
அனைத்து கோரிக்கைகளையும் மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற
வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.
முன்மொழிபவர் : சி.பத்மநாபன்
வழி மொழிபவர் : ஆர்.ரகுராமன்