சிபிஐஎம், ஊர் பொதுமக்கள் போராட்டம் வெற்றி!
வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ.50,000 அரசு நிவாரணம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி, ஆக. 14- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்ட உத்தமர்சீலி, கிளிக்கூடு, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை காட்டுப்பன்றிகள் தொடர்ந்து சேதம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஆக.11 ஆம் தேதி கவுந்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி சகாதேவன்(45) என்பவரை கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதேபோல், அன்று மாலை உத்தமர்சீலியில் கணபதி என்பவர் வாழைத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அங்கு வந்த காட்டுபன்றி கணபதியை கடித்து குதறி கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதில் அவருக்கு தொடை, கை, இடுப்பு என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கணபதி ஆக.13 ஆம் தேதி (புதனன்று) பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்த கணபதியின் உடலை வனசரக அதிகாரிகள் பார்வையிட்டு காட்டுப்பன்றி தாக்கியதில் தான் கணபதி உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வனசட்டப்படி வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை ரூ.10 லட்சத்தை உடனே வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றுப்பகுதியையொட்டி உள்ள கல்லணை கரையோரப் பகுதிகளில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால், விவசாயிகளை காட்டுப்பன்றிகள் தாக்குவதையும், பயிர்களை சேதம் செய்வதை தடுக்கவும் வனபாதுகாவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும். வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கணபதி குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கணபதி உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம், மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மேற்குப் பகுதிச் செயலாளர் ரபீக்அஹமது ஆகியோர் பேசினர். போராட்டத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, கோவிந்தன், கிளைசெயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன் தலைமையில், ஶ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் வனசரக அதிகாரி சுப்ரமணியன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், காட்டுப்பன்றி தாக்கி இறந்த கணபதியின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்படும். காயமடைந்தவருக்கு ரூ.50,000 வழங்கப்படும். ரோந்து பணிக்கு உடனடியாக ஆட்கள் நியமிக்கப்படும். வனவிலங்குகளின் நடமாட்டங்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும். பயிர்கள் சேதமாவது குறித்து குழுஅமைத்து ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கணபதியின் உடலை பெற்று சென்றனர்.