திருப்பரங்குன்றம் வழிபாட்டுத் தலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் வழிபாட்டுத் தலம் குறித்த அனைத்து வழக்குகளை யும் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்காவை முன்வைத்து, சங்- பரிவாரங்கள் கலவர முயற்சிக்குத் திட்ட மிட்டன. ஆனால், திருப்பரங்குன்றம் பகுதி வாழ் இந்துக்கள் - முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், ஒற்றுமையாக இருந்து, அந்த கலவர முயற்சியை முறியடித்தனர். எனினும், இதனை வைத்து, அர சியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்ட, ஹிந்து தர்ம பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. தற்போது தமிழக அரசின் அற நிலையத்துறை மற்றும் வக்பு வாரியக் கட்டுப்பாட்டில் உள்ள “திருப்பரங் குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு விட வேண்டும்; திருப்பரங்குன்றம் மலையில் மத்திய போலீஸை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும்” என்றெல்லாம் கூறியிருந்தன.
இந்த வழக்குகள் புதனன்று நீதிபதி கள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளவர்கள் சண்டை யிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல..” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “ஏன் இதுபோன்று செய்கிறீர்கள்?” எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், “அங்கு உள்ளவர்கள் சண்டையிடாமல் இருந்தாலும், உங்களைப் போன்ற வர்கள், இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து சண்டையிட வைத்து விடுவீர்கள்” என்றும் சாடினர். இதனிடையே, வழக்கில் இடை யீட்டு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது; மேலும் வழிபாட்டுத்தலங்கள் குறித்த வழக்குகளை விசாரணை செய்யக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் வழி பாட்டுத் தலம் தொடர்பான வழக்கு களை விசாரிக்க முடியாது” என வாதங்களை வைத்தனர். இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் தள்ளு படி செய்கிறோம்” என்று உத்தர விட்டனர். அதேநேரம், தொல்லியல் துறை குறித்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.