நாகர்கோவில், ஏப்.17-தமிழகத்தில் வியாழனன்று மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1694 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் வாக்கு சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் புதன்கிழமை துவங்கின. நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு இயந்திரங்களை பத்திரமாக கொண்டு சென்றனர்.கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், மொத்தம் உள்ள 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்களுக்காக 1694 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் உட்பட 3358 காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகா அலுவலகம், பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியஅலுவலகங்களிலிருந்து அனுப்பப்படுகிறது. நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் வாக்குசாவடிகள் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி எந்திரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.