அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 30-ஆம் தேதி, வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினர்.
இருப்பினும், வரும் 2019 இறுதிக்குள் ஐநா உறுப்பு நாடுகளில் வேளை செய்யும் வடகொரியாவை சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அனுப்பும்படி கடந்த ஜூன் 29-ஆம் தேதி அமெரிக்கா கடிதம் ஒன்று அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்துள்ளார். மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.