திருவனந்தபுரம்:
மாவோயிஸ்ட்டுகள் இடதுசாரி நிலைபாடு கொண்டவர்கள் அல்ல எனவும், இடதுசாரி என்ற மேலங்கியை அணிபவர்கள் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவனந்தபுரம் மாவட்டக்குழு ‘ஜனநாயக சமூகமும், கபட மாவோயிஸ்ட்டுகளும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. இதை துவக்கி வைத்து சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் எம்.வி.கோவிந்தன் மேலும் பேசியதாவது: நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கும் நாட்டில் ஆயுதப்புரட்சிக்கான அழைப்பு தவறானது. மற்ற சில நாடுகளில் புரட்சி நடந்தபோது நிலவிய சூழல் இந்தியாவில் இல்லை. சிறிதளவு ஜனநாயகமும் இல்லாத ஏகாதிபத்திய நாடுகளில் மேற்கொள்ளும் தந்திரம் ஜனநாயக நாட்டிற்கு ஏற்றதல்ல... இதனை மாவோவும், சே குவேராவும்கூட தெளிவுபடுத்தியுள்ளனர். தொழிலாளி வர்க்க அரசியலை உறுதியாக பின்பற்றி விவசாயிகளையும், இதர பகுதி மக்களையும் அணி திரட்டியே சீனாவின் விடுதலைக்கு மாவோ போராடினார். காட்டில் ஆயுதம் ஏந்தி திரிவோருக்கு மாவோவின் பெயரை பயன்படுத்தும் தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.விதீன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஏ.ஏ.ரகீம், மாநில செயற்குழு உறுப்பினர் ஷிஜுகான், எஸ்.கவிதா உள்ளிட்டோர் பேசினர்.