முதலாளித்துவ ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களை எல்லாம் புறந்தள்ளி, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரள இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றியைக் குவிக்கப் போகிறது என்பது நிரூபணமாகி வருகிறது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் எல்லாம் அமோக வெற்றிகளைக் குவித்த கேரள இடது ஜனநாயக முன்னணி நாடாளுமன்றத் தேர்தலிலும் இதை நிரூபிக்கப் போகிறது. இதை உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சிகள் இப்போதே ஓட்டுகளை மடைமாற்றம் செய்வதற்கான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடத் துவங்கிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எப்படியாவது கேரளாவில் கணக்கைத் துவங்க முயற்சிக்கும் பிஜேபிக்கு இந்த முறையும் பலத்த அடியே காத்திருக்கிறது. மதவாதத்தை வீழ்த்துவோம்... வளர்ச்சியை முன்னெடுப்போம்... இது நமது கேரளம்...இதுதான் இத்தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் மைய முழக்கமாக இருக்கிறது. இது வெறும் முழக்கமல்ல... கடந்த மூன்றாண்டு காலமாக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு செய்த சாதனைகள், மக்கள் மனங்களில் பதிந்து கிடக்கிறது. அரசியல் தளத்திலும் சமூக தளத்திலும் கேரள அரசின் தூய்மையான வெளிப்படையான செயல்பாடுகளை எவராலும் மறுக்க முடியவில்லை. குறிப்பாக கேரள மக்களுக்கு மத்திய பிஜேபி அரசு செய்த துரோகங்களையும் அதற்கு துணை போன எதிர்க்கட்சிகளையும் கேரள மக்கள் மறந்துவிடவில்லை. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் மக்களை கம்பீரத்தோடு சந்தித்து, தங்களது பிரச்சாரத்தை எழுச்சியுடன் நிறைவு செய்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளிடம் எந்தச் சரக்கும் இல்லாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவையும் மீறி சபரிமலை பிரச்சனையை மட்டும் வெறியேற்றும் வண்ணம் கிளப்பி வருகின்றனர்.
இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆதரவு
இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மாணவர்களும் இளைஞர்களும் சூழ்ந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதோடு வேட்பாளர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.திரையுலகக் கலைஞர்கள் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்காக களத்தில் நின்று பிரச்சாரம் செய்தனர். கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி சாலக்குடி வேட்பாளர் திரைக் கலைஞர் இன்னசென்டை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதுபோல் நடிகர் பிரகாஷ் ராஜ் கேரள இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலோர மாவட்ட மக்களின் முழு ஆதரவு இம்முறை இடதுசாரி அணிக்கே..
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்ட போது பெண்களை தனது முதுகில் மிதித்து படகில் ஏற உதவி செய்தவர் மீனவ இளைஞர் கெ.பி.ஜைசல். உலக மக்களால் பாராட்டப்பட்ட இந்த இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து பொன்னானி நாடாளுமன்றத் தொகுதி இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளருக்கு டெபாசிட் பணத்தை வழங்கியிருக்கிறார்கள். தெற்கு கேரளாவின் தலைநகரத் தொகுதியில் மீன்களைக் கையில் பிடித்து தூக்கிக் காட்டி தனக்கு வந்த வாந்தியை மறைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த எதிர்க்கட்சி வேட்பாளரின் கபடநாடகங்களை கடலோர மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். இடதுசாரி அரசு மீதும் இடது ஜனநாயக முன்னணி மீதும் கடலோர மக்கள் கொண்டுள்ள பேராதரவை கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சூர் மாவட்டம் வலப்பாட்டு என்னும் இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான கடலோர மக்கள் சங்கமம் என்னும் நிகழ்ச்சியில் காண முடிந்தது. மக்கள் பிரவாகமாக கூடிய இக் கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன், “பெரு வெள்ள காலத்தில் மீனவ மக்களின் சேவை மட்டும் கிடைக்காமலிருந்தால் பிரளய நஷ்டம் எத்தனையோ மடங்கு அதிகமாயிருக்கும். எல்லாவற்றையும் மறந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவ மக்கள் கேரள மண்ணின் சொந்த ராணுவம்.. உங்களுக்கு எங்களின் “பிக் சல்யூட்” என்று பாராட்டியதோடு, “உங்களுக்கு எவ்வளவு செய்தாலும் தகும்” என்றார். அதை வெறும் பேச்சாக மட்டுமல்ல. இம்மக்களுக்காக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு செய்த சாதனைகளே சைஜலைப் போன்ற கடலோர மக்களின் அன்பையும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளன. கடலோர மக்களின் இந்த அளவு கடந்த அன்புக்குக் காரணம் அவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்த அரசின் செயல்பாடுகள் தான். கடலோர மீனவ மக்களின் மேம்பாட்டுக்காக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் திட்டங்களில் சில:
மீனவ பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக ரூபாய் 2000 கோடிக்கான பேக்கேஜ் திட்டம் அரசு செயல்படுத்தத் துவங்கியுள்ளது.
* கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நவீனப்படுத்துவதற்காக 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு 250 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது.
* கேரளத் தலைநகரில் உள்ள முட்டத்தறை என்னும் இடத்தில் மீனவர்களுக்காக 192 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுவிட்டன. இன்னும் பல இடங்களில் பணிகள் துவங்கியுள்ளது.
* கடலரிப்பால் தங்கள் நிலத்தையும், வீட்டையும் இழந்த 248 குடும்பங்களுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கி அவர்களுக்கான புனர்வாழ்வுக்குரிய பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
* ஒக்கி புயல் போன்ற பிரளய காலங்களில் மீனவர்களைக் காப்பாற்ற அரசு எடுத்த பாராட்டும் படியான நடவடிக்கைகள்.
* கடலில் சிக்கிய மீனவர்களைப் பாதுகாக்க மூன்று மரைன் ஆம்புலன்ஸ் திட்டம்..
இவ்வாறு எண்ணற்ற திட்டங்கள் இதுவரை எந்த அரசும் இம்மக்களுக்காக செய்யவில்லை என்பதே இம்மக்களுக்கு இடது ஜனநாயக முன்னணி மீது ஆதரவு தளத்தை விரிவுபடுத்தி உறுதியாக்கியுள்ளது.
சர்வதேச கேரள சபை இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக...
வெளிநாடுவாழ் கேரள மக்களின் அமைப்பான சர்வதேச கேரள சபை இத்தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. காரணம் வெளிநாடுவாழ் கேரள மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையில் கேரள அரசின் சிறப்பான செயல்பாடுகளை அம்மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இடதுசாரிகளின் வாக்குகளும் இடங்களும் அதிகரிக்கும்.. கொடியேரிபாலகிருஷ்ணன் உறுதியார் வந்து போட்டியிட்டாலும் 2004ல் பெற்ற வெற்றியைகேரள இடது ஜனநாயக முன்னணி இம்முறையும் பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் உறுதியாக கூறினார். இது வெறும் கற்பனையல்ல. சகல தரப்பு மக்களுக்கும் இந்த அர சுசெய்துள்ள சாதனைகளை நினைவு கூர்ந்தே இதைக் கூறினார்.
கே.சண்முகம் தமுஎகச மாநிலக் குழு
தகவல் உதவி: தேசாபிமானி