கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப்பெண் ஸ்ரீதன்யா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஸ்ரீதன்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம். ஆதிவாசிகளான இவர்களது மகள் ஸ்ரீதன்யா (வயது 26). கடும் வறுமைக்கு இடையில் ஸ்ரீதன்யா யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.
தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் கூலி வேலை செய்து வந்தார் ஸ்ரீதன்யா, சமீபத்தில் மின்சாரம் தாக்கி தன்யாஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது. இந்தநிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியானது. இதில் ஸ்ரீதன்யா, 410 ரேங்க் பெற்று அப்பகுதியில் முதல் ஆதிவாசி பெண் கலெக்டராகி உள்ளார்.
இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஸ்ரீதன்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "சமுதாயத்தில் பின் தங்கிய நிலையை எதிர்த்து ஸ்ரீதன்யா போராடி வெற்றி கண்டுள்ளார். அவரது சாதனை பிற மாணவர்களுக்கும் வரும் காலத்தில் ஊக்கத்தை கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.