சண்டிகர்
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2-ஆம் கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஊரடங்கு மே-3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லை தளர்த்தப்படுமா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்த நிலையில், ஊரடங்கு தொடர்பாக கடந்த 27-ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். அந்தக்கூட்டத்தில் சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும் காலை 7 மணி முதல் 11 மணி வரை என தினமும் 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம். கடைகள் அனைத்தும் திறந்து இருக்கும் எனக் கூறியுள்ளார்.
பஞ்சாப்பில் கொரோனா பரவல் மந்தமாக தான் உள்ளது. அங்கு இதுவரை 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 71 பேர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.