tamilnadu

img

என்ஆர்சியால் அகதியான 51 வயது ஜபேதா பேகம்? 15 ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றம் ஏற்க மறுப்பு

கவுகாத்தி:
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி பட்டியல்) கொண்டுவரப்பட்டு, 13 லட்சம் இந்துக்களும், 6 லட்சம் இஸ்லாமியர்களுமாக மொத்தம் 19 லட்சம் இந்தியர்கள், குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க, தீர்ப்பாயங்களுக்கும், உயர் நீதிமன்றங்களுக்குமாக பல லட்சம் ரூபாய்களை செலவிட்டு, அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், அசாம் மாநிலம் பக்ஷா மாவட்டம் கோயபாரி கிராமத்தை சேர்ந்த 51 வயது, ஜபேதா பேகம் குடியுரிமை அகதியாக்கப்பட்டுள்ளார். 

தான் இந்தியக் குடிமகள்தான் என்பதைநிரூபிக்க, நில வருவாய் ரசீது, வங்கி ஆவணங்கள், பான் கார்டு, தனது தந்தை ஜாபத்அலியின் 1966, 1970, 1971-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல், கிராமத் தலைவர் கையொப்பமிட்டு அளித்த ஆவணம் என ஜபேதா பேகம் 15 ஆவணங்களைத் தாக்கல்செய்திருந்தார். ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட ஏற்க முடியாது என்று என்ஆர்சி தீர்ப்பாயமும், கவுகாத்தி உயர்நீதிமன்றமும் நிராகரித்துள்ளன.ஜபேதா பேகத்தின் தந்தை ஜாபத் அலியின் அடையாளச் சான்றிதழை ஏற்றுக்கொண்டுள்ள தீர்ப்பாயம், ஆனால் ஜபேதா பேகத்திற்கும் அவரது பெற்றோருக்குமான உறவு நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. கவுகாத்தி உயர் நீதிமன்றமோ,நில வருவாய்க்கான ஆவணம், பான் கார்டுஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.

உடல்நிலை சரியில்லாத கணவர் ரெஜாக் அலியை, ஜபேதா பேகம்தான் 150 ரூபாய் கூலிக்கு, வேலைக்குச் சென்றுகாப்பாற்றி வந்தார். இருந்த கொஞ்சம் நிலத்தையும் குடியுரிமையை நிரூபிப்பதற்கான வழக்கிற்காக விற்று செலவழித்துவெறும் ஆளாகி விட்டார். தற்போது குடியுரிமையும் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், எங்கே தன்னை வதைமுகாமில் அடைத்து விடுவார்களா? என்று ஒவ்வொரு நிமிடமும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்.முனீந்திர பிஸ்வாஸ் என்ற இந்து இளைஞரின் குடியுரிமைக்கான ஆவணத்தையும் கவுகாத்தி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. முனீந்திர பிஸ்வாஸ் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக தாக்கல் செய்திருந்த நிலையில், வாக்காளர் அட்டை குடியுரிமைக்கான ஆவணம் ஆகாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.நீதிபதிகள் மனோஜித் பூயான், பார்த்திவ்ஜோதி சாய்கியா ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வுதான், ஜபேதா பேகம்,முனீந்திர பிஸ்வாஸ் ஆகிய இருவரின் வழக்கிலும் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.