tamilnadu

img

தரமற்ற சாலைப் பணிகளை தடுத்து நிறுத்திய வாலிபர் சங்கத்தினர்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 7-  உளுந்தூர்பேட்டை நகரில் பல கோடி  ரூபாய் செலவில் பாதாள சாக்க டைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதற்காக அனைத்து சாலைகளிலும் பள்ளம் தோண்டப்பட்டன. பணிகள் நிறைவடைந்த  பிறகு சாலைகளை சீரமைக்காத்தால், குண்டும், குழியுமாக மாறிவிட்டன. பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பலமுறை போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தெருக்களின் சாலைகளும் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால்  பல சாலைகள் தரமற்ற முறையில் அமைக் கப்பட்டன.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர்   சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, துணைச்செயலாளர் வி.மார்த்தாண்டன், நகரத் தலைவர் ராமராஜன், செயலாளர் இ.சதீஷ்குமார், மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்துவிட்டு அதன்பின் தரமான சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும், தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலைப் பணிகளை நிறுத்த வேண்டும் என மனு  அளித்தனர்.  இதன் விளைவாக தற்போது பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படாத தெருக்களில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மேலும் தரமற்ற சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. வாலிபர் சங்கத்தின் பணியை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.