tamilnadu

img

கடலூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ‘ரெய்டு’

கடலூர், ஏப். 9-

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவராக செயல்பட்டு வருபவர் கோ.ஐயப்பன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் இவர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித் ததால் இம்மாவட்டத்தை சேர்ந்த தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இரு அணியினரும் சேர்ந்த பின்னரும் கடலூர் மாவட்டத்தின் அமைச்சரும், ஐயப்பனும் ஒன்றிணையவில்லை. அவர்களுக்குள்ளான மோதல் போக்கு வளர்ந்து கொண்டே இருந்தது.இந்நிலையில், கோ.ஐயப்பன் மீண்டும் திமுகவில் இணைய உள்ளார் என்ற தகவல் அவரது ஆதரவாளர்களிடம் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. தற்போது, அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டதாகவும், கடலூரில் தேர்தல் பிரச்சாரத் திற்கு வரும் போது ஸ்டாலின் முன்னிலையில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கூறப்பட்டன.


இதனால், செவ்வாய்க்கிழமையன்று அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டில் கூடியிருந்தனர்.மதியம் சுமார் 1 மணிக்கு வட்டாட்சியர் ஆர்.கீதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் ஐயப்பன் வீட்டின் அருகே சென்றனர். அவர்களைத் தொடர்ந்து, தேர்தல் வருமான வரித்துறை துணை இயக்குநர் நிஷாந்த்ராவ் தலைமையிலான 8 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றனர். வீட்டின் கதவினை அடைத்து விட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரது ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் வீட்டின் வெளியே காத்திருந்தனர்.அதே நேரத்தில் அவரது ஆதரவாளரான கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.பிரகாஷ் வீடு, அருகிலுள்ள அவரது மாமனார் வீட்டிலும் சோதனை நடத்தினர். இச்சோதனைகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப் பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங் கள் தகவல் தெரிவித்தன. அதே நேரத்தில் பணம், பொருட்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பதை தெரிவிக்கவில்லை.


அதிமுகவிலிருந்து வெளியேறுகிறேன்: கோ.ஐயப்பன்

வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனைக்குப் பின்னர் கோ.ஐயப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்தின் செயல்பாடு சரியில்லை என்பதால் அடுத்த கட்ட முயற்சி குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். எனது ஆதரவாளர்களை குலைப்பதற்காகவும், எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அமைச்சரின் தூண்டுதலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றவில்லையென்று கூறி விட்டுச் சென்றுள்ளனர்.எனக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் தான் இது. கடலூரில் மற்றவர்களிடம் உள்ள பணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை வருமான வரித்துறையினரிடம் வைத்துள்ளேன். அமைச்சரின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் மட்டுமே அதிமுகவை விட்டு வெளியேறுகிறேன்” என்றார்.