அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்கள் யாரும் தேவையின்றி ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சிகரப் படையின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் அமெரிக்கா ஈரானில் உள்ள 52 புராதன சின்னங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது. ட்ரம்பின் மிரட்டலுக்கு யுனெஸ்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் மற்றும் ஈராக் வளைகுடா நாடுகளின் வான்பகுதிக்குள் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஈரான் மற்றும் ஈராக்கிற்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த பதற்றமான சூழலில் இந்தியர்களுக்கு பாக்தாத் மற்றும் எர்பிலில் தூதரக அலுவலகங்கள் முழு உதவியும் வழங்கும் என்ற வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டுக்கு சொந்த மானபயணிகள் விமானம் ஈரான் வான்பரப்பில் சென்ற போது விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த 180 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.