tamilnadu

img

குழந்தைகள் மீது ஓர் ஆன்லைன் யுத்தம்...

சில நாட்களுக்கு முன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் “ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். ஆனால், அறிவித்த சில மணி நேரங்களிலேயே தனியார் பள்ளிகளின் அழுத்தத்தின் காரணமாக அதை திரும்ப பெற்றுக்  கொண்டார். பின்னர் ஜூலை 13-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். பின்னர் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது; தொலைக்காட்சி வழி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கிறார். 

இப்படியான தொடர் முரண் அறிவிப்புகள் தமிழக மாணவர்களையும், அவர்களின் பெற்றோர் களையும் கொரோனா தொற்றை விட  அதிக கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இணைய அசமத்துவம்
சர்வ சிக்சா  அபியான் விவரங்களின்படி தமிழகத்தில் 58,033 பள்ளிகளில் 1,31,85,526 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். அதில் பாதிக்கு பாதி மாணவர்கள் தமிழகத்தின் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.  2016 ஆய்வின்படி 7.21 லட்சம் - அதாவது 1.10 சதவீத மக்கள் மலையகப் பகுதிகளில் வாழ்கின்றனர். தமிழகத்தில் 41.98 சதவீதம் மக்கள் மட்டுமே ஏதாவதுஒரு வகையில் இணைய வசதியை பெறுபவர் களாக உள்ளனர். இந்தியா முழுவதுமே வெறும் 9% வீடுகளில் மட்டுமே கணினிகளுடன் கூடிய இணையத்தை மக்கள் பெற்றுள்ளனர். அதுவும் ஏழைபணக்காரர் என்ற பெரும் அசமத்துவம் உள்ளது.இதிலும் பழங்குடியின மற்றும் பட்டியலினத்தவர்களில் ஒட்டுமொத்தமாகவே 4 சதவீதம்தான் இணையம் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்த சூழலில்தான் இன்று முதல் (ஜூலை 13)ஆன்லைன்வகுப்புகளை அரசு பள்ளிகளில் துவங்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு மேலாக பொது முடக்கத்தால் வீடுகளில் முடங்கியுள்ள மாணவர்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ள பெற்றோர்களும்  இந்த அறிவிப்பினால் கலக்கமடைந்துள்ளனர்.

சவால்களும், விளைவுகளும்
எத்தகைய சூழலிலும் மாணவர்களுக்கு கல்வி சென்றடைய வேண்டும் என்பது அத்தியாவசிய தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால்பல குடும்பங்கள் பொருளாதார சிக்கல்களால் சிதைந்து கிடக்கையில் 300, 400 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்து இணைய வகுப்புகளில் கலந்து கொள்வது சாத்தியமா என்பது கேள்விக்குறியே! அதிலும் இரண்டு. மூன்று குழந்தைகளை உடைய குடும்பங்கள் எப்படி தனித்தனியாக ஒவ்வொரு குழந்தைக்கும் இணைய வசதியையும், கணினி வசதியையும் ஏற்படுத்தித்தர முடியும். குறிப்பாக தனியார் பள்ளிகளில் இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமானால் கல்விக் கட்டணத்தை கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என்றசூழல் உள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்தமன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். மலையக, கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு மின் வசதியே இல்லாத சூழலில் தொலைக்காட்சி வழியாகவோ, தொலைபேசியிலோ நடத்தப்படும் இணைய வகுப்புகளில் எவ்வாறு பங்கேற்க முடியும்? அப்பட்டமாகவே ஒருசார் குழந்தைகளை கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நவீன தீண்டாமையே அன்றி இது வேறன்று. பிரெய்லி முறையில் கல்வி பயிலும் பார்வைக் குறைபாடு உடைய மாணவர்கள் எவ்வாறு இது போன்ற இணைய வகுப்புகளில் பங்கேற்க முடியும் என்ற எந்த ஒரு வழிகாட்டுதல்களும் இல்லை. மேலும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி பயின்று வரும் ஏழைக் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. அதுமட்டுமின்றி பொதுமுடக்கத்தால் தங்கள் கிராமங்களுக்கே சென்றுவிட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் எப்படி கல்வி பெறுவார்கள்என்பதற்கும் அரசிடம் பதில்கள் இல்லை. பல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழி கற்பித்தலில் பெரும்பாலும் அனுபவம் கிடையாது.  

உளவியலும் உடலியலும் 
இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினைகளும் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.மருத்துவ ஆய்வுகளின் படி கணினியும் அல்லதுநீல கதிர்களை வெளியேற்றக் கூடிய எந்த ஒரு மின்னனு பொருளிடமிருந்தும் குழந்தைகள்  இடைவெளியை  கடைப்பிடிக்க வேண்டும். அதேபோலநீண்டநேரம் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால் மட்டுமே
ஓரளவு இவற்றால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கமுடியும். ஆனால் ஏற்கனவே தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகளை துவங்கிநாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து மணிநேரம் நடத்திவருகின்றனர். 1 முதல் 12 வகுப்பு  வரையிலான குழந்தைகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபடும்போது “computer vision syndrome” போன்ற நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதிலும் தனியார் பள்ளிகள்கட்டாயமாக மாணவர்கள் சீருடை அணிய வேண்டும், டை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதிப்பது அடக்குமுறையின் உச்சம். இது மாணவக் குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன ஆன்லைன் போர்தான். 

50 சதவீத ஊழியர்களோடு பல நிறுவனங்கள் இயங்கத்  தொடங்கிவிட்ட நிலையில் பெற்றோர் கள் வேலைக்கு சென்று விட்டால் பிள்ளைகளின் நிலை படுமோசம்.  எழுத்தறிவு கிடைக்கப் பெறாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரவோ அல்லது தங்கள் குழந்தைகள் சரியாக பாடங்களை கவனிக்கிறார்களா என்பதை கண்காணிக்கவோ முடியாமல் தவிக்கின்றனர். ஏற்றத்தாழ்வு, நீல கதிர்களால் ஏற்படும் மனஅழுத்தம், ஓய்வின்மை, தூக்கமின்மை, களைப்புபோன்ற உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் வகுப்புகளை அரசு தொடருமானால்  பல குழந்தைகள் கல்வியை விட்டு ஒதுக்கப்படுகிற, இடை நிற்கிறஅபாயம் உள்ளது.தொலைக்காட்சி வழியாக வகுப்புகள் நடைபெறுவது வெறும் ஒற்றைச் சாளர முறையாகவே இருக்கும். ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை மாணவர்கள் கவனிக்க முடியுமே தவிர சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவோ, புரியாததை புரிந்து கொள்ளவோ முடியாது. 

கேரளம் என்ன செய்கிறது?
தமிழகம் இணைய வசதிகளை கொண்டு செல்வதில் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே ,அதுவரை இணைய வகுப்புகள்நடத்தி மாணவர்களை பிரிப்பதை கைவிட்டு இணையத்தை மக்களுக்கு கொண்டு செல்வதை முன்னெடுக்கவேண்டும். அதற்கு முதலில் இந்திய மாநிலமான கேரளாவின் செயலை தெரிந்து கொள்ள வேண்டும். கடந்தஆண்டு கேரள இடதுஜனநாயக முன்னணி  அரசுஅனைத்து மாவட்ட கிராமங்களிலும் அரசு மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள், பேருந்து நிறுத்தம், மருத்துவமனை என எல்லா இடங்களிலும் இலவச வைபை வசதியை அறிமுகப்படுத்தினார்கள். இதனால் கணிசமான மக்களை பொது இணையத்துடன், சமூக வலைதளங்களுடன்  இணைக்கமுடிந்தது. குறிப்பாக கேரளாவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வைபை வசதி உண்டு. அதுமட்டுமின்றி இந்த பேரிடர் காலத்தில் விக்டர்ஸ் என்றசேனல் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கொண்டு செல்லும் முயற்சியை எடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் தொலைக்காட்சிப்பெட்டி , செல்போன் போன்றவற்றை உதவியாக பெற்று, இல்லாத மாணவர்களுக்கு விநியோகம் செய்யும் அரும்பணியைமுன்னெடுத்துள்ளனர். குறிப்பாக பார்வைக்குறைபாடுள்ள மாணவர்களுக்காக இணையகுழுக்களை உருவாக்கி ஒலிவடிவில் பாடங்களை பயில வழி செய்துள்ளனர். White board (ஒயிட் போர்டு) என்ற யூடியூப் பக்கத்தை துவங்கி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் அதில்நடைபெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாடலை கொண்டு மற்ற மாநிலங்களிலும் இதை சாத்தியப்படுத்த வேண்டும்.அது வருங்காலத்தில் இதுபோன்ற வேறொரு பேரிடரை சந்திக்க பேருதவியாக இருக்கும். இந்த ஊரடங்கு நேரத்தில் மாணவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வை  ஏற்படுத்தாமல், தேர்வு குறித்த பயத்தை உருவாக்காமல் ஆசிரியர்களை  மாணவர்களிடம் பேசவைப்பது, வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்தல்,உடல்நலம் மேம்படுதல் குறித்தான விழிப்புணர்வைஏற்படுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும்.அவர்களுக்கு தேர்வு குறித்த பயத்தை நீக்குவதுபோன்ற கவுன்சிலிங் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சி மூலமாகவும், வேறு வகையிலோ விழிப்புணர்வாக கொண்டு செல்ல வேண்டும்.குறிப்பாக ஊரடங்கு நீண்டுக்கொண்டே போகும் நிலையில் மாற்றுக்கல்வித் திட்டத்தை அரசுவகுக்க வேண்டும். அதற்கு கள ஆய்வை மேற் கொள்ள வேண்டும்.

பாடப்புத்தகங்கள் எங்கே?
தற்போது தமிழக அரசு எந்த ஒரு கள ஆய்வும்மேற்கொள்ளாமல் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது முழுக்க முழுக்க மாணவர் விரோத தனியார்சார்பு நிலைப்பாடாகும். நான்கு தனியார் தொலைக் காட்சிகளோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் மின்இணைப்பே இல்லாத, மின்தடை அடிக்கடி ஏற்படும்கிராமப்புறங்களில் இந்த திட்டம் எப்படி சாத்தியப்படும். குறிப்பாக குழந்தைகள் பாடப்புத்தகங் கள் இல்லாமல்  கற்றுக்கொடுக்கப்படும் பாடங் களை புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். எனவே, குறைந்தபட்சம் பாடப்புத்தகங்கள் எல்லாகுழந்தைகளுக்கும் கிடைத்த பின்னரே இந்த திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக ஆன்லைன் வகுப்புகளை ,முன்வைக்க முடியாது.  ஆனால், இதுபோன்ற ஒரு பொதுமுடக்க காலத்தில் தற்காலிக தீர்வாக இவை பயன்படலாம். கிராமப்புற மாணவர்களுக்கு அருகமை வகுப்புகளை ஏற்படுத்துவது, படித்த இளைஞர்களை பயன்படுத்தி வகுப்புகளை சமூக இடைவெளியோடு அந்தந்த ஊர்களிலே நடத்துவது, பொதுவெளி திரையிடல் மூலமாக வகுப்புகளை கொண்டு செல்வது, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பது, உளவியல் ஆலோசனைகளை ஆசிரியர்கள் மூலம் தொலைபேசி வாயிலாக வழங்குவது  என்பதே தற்காலிக தீர்வாக இருக்கும். அதைவிடுத்து ஆன்லைன் வகுப்பை அதிகாரப்பூர்வமாக துவங்குவது என்பது அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தை மீறுவதாகும். மேலும்இது தனியார் பள்ளிகளின் கட்டற்ற கட்டணக் கொள்ளைக்கு வழிவகுக்கும். கல்வி உரிமை சட்டத்தின்படி கற்கத் தேவையான உபகரணங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அதை இந்தபொதுமுடக்க காலத்தில் எந்த அரசு தனியார் பள்ளிகளும் செய்யாமல் சுமைகளை பெற்றோர்கள் மீதுசுமத்தக்கூடாது.
குழந்தைகள்  மற்றும் மாணவர்கள் மீதானசமூக பொறுப்புணர்ந்து அரசு நடந்து கொள்ளுதலே சாலச்சிறந்தது.

===எஸ்.சுபாஷ்சந்திரபோஸ்===
தென்சென்னை மாவட்டத் தலைவர், இந்திய மாணவர் சங்கம்