மாஸ்கோ
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா பரவல் தாறுமாறான வேகத்தில் உள்ளது. தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு ஊரடங்கைக் கடுமையாக்கியது. இருப்பினும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 867 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதியில் உள்ள மாகாணங்கள் கொரோனாவால் கடும் சேதாரத்தைச் சந்தித்து வருகின்றன. ஏப்ரல் 13-ஆம் முதல் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியிருந்த நிலையில், கடந்த இரண்டே வாரத்தில் 1 லட்சத்தை நெருங்கியுள்ளது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆறுதல் செய்தியாக 8 ஆயிரத்து 400 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.