tamilnadu

img

பாரிஸின் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் உள்ள பழமையான தேவாலயமான நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. 

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் உள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் பொக்கிஷங்களுள் ஒன்றாகும்.  கடந்த 1991-ஆம் ஆண்டு ஐநாவில் இந்த தேவாலயம், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேவாலயத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் தேவாலயத்தின் முழுவதும் தீ பரவி, அதன் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது. புனித வாரத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது, கிறிஸ்துவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ”14-ஆம் நூற்றாண்டு முதல், உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் புகைப்படங்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு மற்றும் மக்களை போலவே என் எண்ணங்களும் தற்போது உள்ளன” என தெரிவித்துள்ளார்.