இந்தியாவில் மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென துவக்க காலம் முதல் மகத்தான போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இப்போராட்டங்களில் சந்தித்த அடக்குமுறைகள், வழக்குகள், சிறைகொட்டடிகள், உயிர்ப் பலிகள் ஏராளம். நீண்ட இப்போராட்டங்களின் விளைவாகவே, 1956ம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இவ்வுத்தரவு அடிப்படையிலேயே இன்றைய ‘தமிழ்நாடு’ என்ற சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது.
ஒரு தேசிய இனமாக...
வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும், காலம் காலமாக பல பேரரசுகள், குறுநில மன்னர்கள், மூவேந்தர்கள், அந்நிய படையெடுப்பாளர்கள், இறுதியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆகியோரின் ராஜ்ஜியத்தில் தமிழ்ச்சமூகம் பல்வேறு கூறுகளாக பிரிந்து கிடந்தது என்பதே வரலாற்று உண்மையாகும். ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைந்து ஒரே ஆட்சி அமைப்பின் கீழ் வாழ்ந்த வரலாறு முன்னெப்போதும் இல்லை. ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு ஆட்சி நிர்வாக அமைப்பின்கீழ் வாழும் வரலாறு போற்றும் நிலை உருவான நாள் தான் நவம்பர் 1, 1956.
நீண்டநெடிய போராட்டம்
மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைவதற்கான போராட்டம் நீண்ட நெடியதாகும். பிரிட்டிஷ் இந்தியாவில் 1874-ல் மொத்தம் 3 மாகாணங்கள் மட்டுமே (பம்பாய், சென்னை, வங்காளம்) அமைக்கப்பட்டன. 1937ல் பிரிட்டிஷ் அரசு 11 மாகாணங்களாக பிரித்தது. பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாக ஏற்பாட்டிற்கான பல காரணங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் இருந்த மொழி உணர்வையும் கணக்கில் கொண்டே இவ்வாறு பிரிக்கப்பட்டது. ஆனாலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் பற்றி பெரிதும் கவலைப்படவில்லை. இந்திய மக்களை ஒட்டச் சுரண்டுவதும், அதனை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்குவதுமே அவர்களது குறிக்கோளாக இருந்தது.
தாய்மொழியில் பிரச்சாரம்
விடுதலைப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி இந்திய மக்களை விடுதலைப் போரில் ஈர்ப்பதற்கு அவரவர் தாய்மொழியில் பிரச்சாரம் மேற்கொள்வதில் முயற்சிகளை மேற்கொண்டது. பாரதி போன்ற எண்ணற்ற விடுதலைப் போராட்ட கவிஞர்கள் மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பினார்கள். நாடு விடுதலை அடைந்தால் மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்படுமெனவும், தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனவும் காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1920ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே, காங்கிரஸ் கட்சியின் மாகாணக் கமிட்டிகள் மொழிவழி அடிப்படையிலான மாகாணக் கமிட்டிகளாக அமைக்கப்பட்டன. உதாரணமாக தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளைக் கொண்ட சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலத்திற்கான மாகாணக்கமிட்டிகளை அமைத்திருந்தது. 1936-46 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுமென வாக்குறுதிகளையும் தனது தேர்தல் அறிக்கையில் பதிவு செய்திருந்தது.
இந்துத்துவா சக்தியின் எதிர்நிலை
இன்னொரு பக்கம், இதே காலத்தில் செயல்பட்ட ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை ஆகிய அமைப்புகள் மொழிவழி அடிப்படையிலான மாநிலங்களை எதிர்த்து வலுவான பிரச்சாரங்களை மேற்கொண்டன. அவ்வமைப்புகள் இன அடிப்படையில் மக்கள் திரளுவதானது இந்து, இஸ்லாமியர் என்ற மதப் பிரிவினைக்கு மவுசு குறைந்து விடும் என்ற நோக்கிலேயே எதிர்ப்பிரச்சாரம் மேற்கொண்டனர். பல்வேறு மொழி பேசும் மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து நாடு விடுதலை பெற்ற பின்பு, மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஆழமாக இருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிராகரித்து மொழிவழி அடிப்படையிலான கோரிக்கைகளை கிடப்பில் போட முயற்சித்தது.
நீதிபதி தார் குழு
1948ம் ஆண்டு நீதிபதி தார் அவர்களது தலைமையில் டி.ஏ.ராமலிங்கம், ராமகிருஷ்ணராசு ஆகியோரைக் கொண்ட குழுவினை மத்திய அரசு அமைத்தது. மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென இக்குழு பணிக்கப்பட்டது. இக்குழுவின் சிபாரிசுகளை நாடு முழுவதும் மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மக்களின் உணர்வுக்கு எதிராக மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைப்பது கூடாது என இக்குழு சிபாரிசு செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே இப்பிரச்சனையை கிடப்பிலே போட எண்ணியிருந்த மத்திய அரசுக்கு இக்குழுவின் அறிக்கை வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்ததைப்போல அமைந்துவிட்டது.
மார்க்சிய அணுகுமுறையுடன்...
காங்கிரஸ் கட்சியின் இப்போக்கினை எதிர்த்து நாடு முழுவதும் வலுவான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தார்கள். இந்தியாவின் சிக்கல்கள் நிறைந்த தேசிய இனப்பிரச்சனையில், மார்க்சிய அடிப்படையில் மிகச்சிறந்த அணுகுமுறையினை கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற லட்சிய முழக்கத்தை கம்யூனிஸ்டுகள் எழுப்பினாலும் உலகம் முழுமைக்கும் அல்லது இந்திய நாடு முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே அரசு நிர்வாகம் என்ற கோஷத்தை எப்போதும் முன் வைத்ததில்லை. மாறாக, அந்தந்த தேசிய இன மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மொழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாக வேண்டுமென்ற கொள்கை முழக்கத்தை வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்டுகள் எழுப்பி வந்துள்ளார்கள். இந்த அடிப்படையிலேயே 1938 முதல் இந்தியாவில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட விசால ஆந்திரா என்ற முழக்கத்தை தோழர் பி.சுந்தரய்யா தலைமையிலும், மலையாள மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்து நவகேரளம் என்ற கோஷத்தை தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலும், தமிழ் பேசும் மக்களை ஒருங்கிணைத்து ஐக்கிய தமிழகம் என்ற கோஷத்தை பி.ராமமூர்த்தி, பி.ஜீவா ஆகியோர் தலைமையிலும்; இதே போல கன்னடம், வங்காளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் குரலெழுப்பி வந்தார்கள்.
பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம்
பல பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தெலுங்கு மொழி அடிப்படையிலான ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டுமென அம்மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். விடுதலைக்குப் பிறகு இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட நிலையில், மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1952ம் ஆண்டு அக்டோபர் 13ம் நாள், தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். இதனையொட்டி தெலுங்கு பேசும் பகுதிகள் முழுவதும் பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன. ரயில் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இப்போராட்டத்தை அடக்க காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களின் மூலம் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றுவதற்கு யாரும் நிர்ப்பந்திக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிக்கை விட்டதுடன், இத்தகைய போராட்டங்களுக்கு காங்கிரஸ்காரர்கள் ஆதரவு அளிக்கக்கூடாதென கட்டளை பிறப்பித்தது. அதையும் மீறி காங்கிரஸ்காரர்கள் மக்களோடு போராட்டங்களில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பொட்டி ஸ்ரீராமுலு 65-வது நாள் மரணமடைந்தார். எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல போராட்டங்கள் தீவிரமடைந்தன.
இப்போராட்டத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்த பிரதமர் நேரு, ஆந்திர மாநிலம் 2-10-1953ல் அமைக்கப்படுமென 19-12-1952 அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆந்திர மாநிலம் அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மேலும் வலுவடைந்து போராட்டங்கள் தீவிரமடைந்தன. இப்போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு 1954ம் ஆண்டு ஒரிசா மாநில கவர்னரான பசல் அலி தலைமையில், சர்தார் கே.எம்.பணிக்கர் மற்றும் ஹெச்.என்.குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ‘மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழுவினை’ பிரதமர், நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இக்குழு இந்திய நாடு முழுவதும் சென்று பல அரசியல் கட்சிகள், பிரமுகர்களை சந்தித்து ஆய்வு நடத்தியது.
ராஜாஜி குறுக்குசால்
மாநிலங்கள் மறுசீரமைப்புக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க இருந்த நிலையில், சென்னை மாகாணத்தில் மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கு மாறாக, ‘தட்சிண பிரதேசம்’ அமைக்கப்பட வேண்டுமென முதலமைச்சரான ராஜாஜி குறுக்குசால் ஓட்டினார். அதாவது, திராவிடர் கழகம் முன்வைத்திருந்த திராவிட நாடு என்பதை பெயர் மாற்றி தட்சிண பிரதேசம் அமைக்க வேண்டுமென்பதே அவரது உள்நோக்கமாக இருந்தது. அதாவது, எப்படியாவது மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதை தடுத்து விட வேண்டுமென வரிந்து கட்டி செயல்பட்டு வந்தனர்.
கம்யூனிஸ்ட்டுகளின் எழுச்சி
இந்நிலையில், தமிழ்பேசும் பகுதிகளைக் கொண்ட தமிழ் மாநிலம் அமைந்திட வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி பிரம்மாண்டமான போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியது. சென்னையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் 14000 பேர் உட்பட 50000 பேர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன், கே.முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழரசுக் கழகத் தலைவர் மா.பொ.சிவஞானம் அவர்களும் கலந்து கொண்டார். அமைதியாக நடந்த ஊர்வலத்தின் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடி நடத்தி சில ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரின் மண்டைகள் உடைக்கப்பட்டன. ஜீவா உள்ளிட்டோர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் வலுவாக நடைபெற்றது.
ஐக்கிய தமிழகம் அமைக்க வேண்டுமென உறுதிமிக்க போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், திராவிட இயக்கம் திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்னெடுத்திருந்தது. திராவிட நாடா? தமிழ் நாடா? என்ற அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்த காலம் அது.
அண்ணாவும் ம.பொ.சி.யும்
சென்னையில் அப்போது நடைபெற்ற ஒரு ஆசிரியர் மாநாட்டில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் அண்ணா அவர்களும், தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி அவர்களும் கலந்து கொண்டு பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநாட்டில் பேசிய அண்ணா, தனது நாவன்மையைப் பயன்படுத்தி திராவிட நாடே சிறந்தது என்கிற வகையில் உரையாற்றினார். அதற்கு ஒரு உதாரணத்தையும் குறிப்பிட்டார். ஒரு அணாவில் காலணா பொருந்தும்; ஆனால் காலணாவில் ஒரு அணா பொருந்தாது என்பதைப் போல ஒரு அணா என்பது திராவிட நாடு; காலணாவைப் போன்றதுதான் தமிழ்நாடு என நயமாகப் பேசி முடித்தார். அடுத்து மபொசி பேச வந்த போது சிலர் தமிழ்நாடு வாழ்க எனவும், இன்னும் சிலர் திராவிட நாடு வாழ்க எனவும் கோஷமிட்டனர். இதைக் கேட்ட மபொசி, அண்ணாவிடம் ஒரு அணாவில் காலணா பொருந்தவில்லையே என நயமாகக் கூறினார்.
பசல் கமிஷன் அறிக்கை
இந்த சூழ்நிலையில் 1955ம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று பசல் கமிசன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் தமிழ்நாடு, கேரள, கன்னட மாநிலங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டின் இதர பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. இக்குழு சிபாரிசுகள் படி, 16 மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், பல மாநிலங்கள் மொழி அடிப்படையில் அமைக்கப்படவில்லை. மொழி வாரியாக ராஜ்யங்கள் அமைப்பது என்ற கோட்பாடு மட்டுமே நமக்கு அடிப்படையாக இருக்க முடியாது என இக்குழு தெரிவித்ததை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்து அறிக்கை விட்டதுடன், இக்குழு சிபாரிசு அடிப்படையில் மொழிவழி அல்லாமல் மாநிலங்கள் உருவாக்குவதை எதிர்த்து போராட்டங்கள் நடத்த வேண்டுமென அறைகூவல் விடுத்தது. அதனடிப்படையில், இந்தியாவின் பல பகுதிகளில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாவதற்கு விடுதலைக்குப் பின்னரும் பல பத்தாண்டுகள் போராட்டங்கள் நடைபெற்றன. மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டவுடன் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி, மொழி அடிப்படையில் எவ்வாறு மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும், மாநிலங்களின் எல்லை எவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டுமென விரிவான மனுவினை இக்குழு முன் சமர்ப்பித்தார். மறுபக்கம், காங்கிரஸ் கட்சியோ மறுசீரமைப்புக் குழுவின் முன்பு அகில இந்தியத் தலைமையின் அனுமதி பெறாமல் தனி மாநிலங்கள் உள்ளடக்கிய கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கக்கூடாது என மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னை யாருக்கு?
ஆந்திர மாநிலம் தனியாக அமைக்கப்பட்ட போது, அம்மாநிலத்திற்கு தலைநகர் எது என்ற கேள்வி எழுந்தது. சென்னையை ஆந்திரத்தின் தலைநகராக மாற்ற வேண்டுமென ஆந்திர பகுதியிலுள்ள காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் கோரினர். ஆந்திராவைச் சேர்ந்த மூத்த தலைவர் பிரகாசம், சென்னையை முழுமையாக ஆந்திராவிற்கு கொடுக்க இயலாவிட்டால் கூவம் மையமாக வைத்து தென்பகுதியை தமிழ்நாட்டிற்கும், வடபகுதியை ஆந்திராவிற்கும் அளித்திட வேண்டுமென கோரிக்கை முன்வைத்தார். தமிழ்நாட்டிலுள்ள அமைப்புகள், சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பது தொடர வேண்டும் என வற்புறுத்தினார்கள். தந்தை பெரியார், சென்னை ஆந்திரத்தில் இருந்தாலென்ன? தமிழ்நாட்டில் இருந்தாலென்ன? திராவிடத்தில்தானே இருக்கப்போகிறது எனத் தெரிவித்து விட்டார். காமராஜர் இதைப்பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இத்தகைய சூழ்நிலையில் சென்னை தமிழ்நாட்டின் தலைநகராகவே தொடர வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலக்குழுவும் சென்னை மாகாண மாநிலக்குழுவும் ஒருமனதாக கையொப்பமிட்டு மனுவினை பசல் கமிசனிடம் சமர்ப்பித்தது.
திருப்பதியும், திருத்தணியும்
அதேபோல ஆந்திர மாநிலத்தின் எல்லையை தீர்மானிப்பதிலும் பல கருத்து மோதல்கள் இருந்தன. மபொசி உள்ளிட்ட பலரும் திருப்பதி உள்ளிட்ட சித்தூர் மாவட்டம் முழுமையாக தமிழகத்தோடு இருக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர, சென்னை மாநிலக்குழுக்கள் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட கிராமங்களை அலகாகக் கொண்டு திருத்தணி வட்டத்தை தமிழ்நாட்டோடும், இதர பகுதியை ஆந்திரத்தோடும் இணைக்க வேண்டுமென வற்புறுத்தின.
தாய்த் தமிழகத்தோடு இணைந்த குமரி
திருவிதாங்கூர் சமஸ்தானம் கொச்சினோடு இணைந்திருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலுள்ள தமிழ்ப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பி.எஸ்.மணி முன்மொழிந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவானந்தம், பி.எஸ்.மணி, நேசமணி உள்ளிட்டோர் தலைமை தாங்கிட இதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1954 ஜூலை 9 அன்று தமிழர் விடுதலை நாளாக அறிவித்து போராட்டம் நடந்த போது, அப்போதைய திருவிதாங்கூர் கொச்சின் முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை காவல்துறையை ஏவி, கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார். அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இப்போராட்டத்தின் விளைவாக, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த தமிழ் பேசும் பகுதிகளான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டம் என அறிவிக்கப்பட்டு தாய்த் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
3 மாநிலங்கள் உதயம்
இத்தகைய நீண்ட போராட்டப் பின்னணியில்தான், பசல் குழுவின் சிபாரிசு அடிப்படையில் 1956 நவம்பர் 1ம் தேதி மொழிவழி அடிப்படையிலான தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
ஆந்திராவின் தலைநகர் பற்றி ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி வாஞ்சூ தலைமையிலான குழு சென்னை தமிழ்நாட்டோடு இருக்க வேண்டுமெனவும், ஆந்திரத்திற்கு தனி தலைநகர் தேர்வு செய்ய வேண்டுமென செய்த சிபாரிசை ஏற்று மத்திய அரசு முடிவுகளை அறிவித்தது. அதேபோல, ஆந்திர எல்லையை தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட படஸ்கர் தலைமையிலான குழு சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி தாலுகா உட்பட்ட 322 கிராமங்களை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்ற சிபாரிசும் ஏற்றுக்கொண்டு அறிவிக்கப்பட்டது. மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்க வேண்டுமென்பதோடு, பிரதேச உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, சென்னை மாகாணம் என்பதும் அதற்கான பகுதிகளும் மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டன.
பி.ராமமூர்த்தி தீர்மானம்
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தமிழ் மொழி அடிப்படையிலான மாநிலம் உருவான போதும், அதற்கு சென்னை மாகாணம் என்றே பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் வலுவாக குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தில் 1961ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தோழர் பி.ராமமூர்த்தி சட்டத்திருத்த மசோதாவை முதன்முதலில் கொண்டு வந்தார். இம்மசோதா வாதத்திற்கு வரும் நேரத்தில் தோழர் பி.ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை முன்மொழிந்து மேற்கு வங்கத்தைச் சார்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ்குப்தா நாடாளுமன்றத்தில் வாதாடினார். அண்ணாஅவர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். எனினும், இத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
சங்கரலிங்கனார் உண்ணாவிரதம்
இதே கோரிக்கையை வற்புறுத்தி காங்கிரஸ்காரரான சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். கோரிக்கையை ஏற்காதது மட்டுமல்லாமல், காங்கிரஸ்காரர்கள், உண்ணாவிரதப் பந்தலை பிய்த்து எறிந்தனர். இறுதிவரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பாதுகாப்பாக செயல்பட்டனர். இறுதியில், உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனார் 55வது நாள் மரணமடைந்தார். தனது மரணத்திற்குப் பின் உடலை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் அவரது உடலை கம்யூனிஸ்டுகள் பெற்று அடக்கம் செய்தனர். இறுதியில் 1967ம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு, அண்ணா முதலமைச்சரான பிறகே, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சட்டமன்றத்தில் தமிழ்
தமிழ்நாட்டில் ஆட்சி மொழி, பயிற்றுமொழி, உயர்நீதிமன்றம் உட்பட வழக்காடு மொழியாக தமிழே இடம் பெற வேண்டுமென தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் முதல் சட்டப்பேரவையில் ஆங்கிலம் மட்டுமே அவை மொழியாக இருந்த நிலைமையை மாற்றி, முதலில் தமிழில் பேசி பதிவு செய்தவர்கள் தோழர் பி.ராமமூர்த்தி, ஜீவா ஆகிய கம்யூனிஸ்டுகளாகும். ஆனால், இன்றும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நடைமுறைப்படுத்தப்படாத கோஷமாக இருப்பது வருத்தமளிப்பதாகும். தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை அரங்கேற்றும் முயற்சி அனுதினமும் நடந்து கொண்டிருக்கிறது. அரசு நடத்தும் மழலைப்பள்ளிகளிலும் ஆங்கிலமே கோலோச்சும் நிலை உள்ளது.
மொத்தத்தையும் பறித்து, சிதைக்கும் பாஜக
இன்னொரு பக்கம், போராடிப் பெற்ற மாநிலங்களின் உரிமைகளை வெட்டி சுருக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல துறைகளை கொல்லைப்புறமாக பறித்துக் கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்கிற அடிப்படையில் ஒற்றைக் கலாச்சாரத்தை திணித்துக் கொண்டுள்ளது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்கான நடவடிக்கைகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது. இந்திய நாட்டில் பல மாநிலங்கள், பல மொழிகளைக் கொண்ட பன்முகத்தன்மை நீடிப்பதானது ‘இந்துத்வா’ என்ற மத அடிப்படையிலான அரசியல் அணி திரட்டலுக்கு தடையாக அமைந்து விடும் என்பதாலேயே இத்தகைய நடவடிக்கைகளை பாஜக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநிலங்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்திடவும், மேலும் உரிமைகளைப் பெறவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
உறுதியேற்போம்!
தமிழ்மொழிப் பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற குரல் வலுவடைய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது என்பதை விளக்க வேண்டியதில்லை. இக்கடமைகளை கடந்த காலங்களைப் போலவே பெருமையோடு நிறைவேற்றிட உறுதியேற்போம்.