மதுரை, நவ. 13 - இந்திய மாணவர் சங்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும் எழுத்தா ளரும் நாடக இயக்குநருமான தோழர் டாக்டர் க.செல்வராஜ் மதுரையில் புதனன்று காலமானார். அவருக்கு வயது 64. தமிழகத்தில் மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழும் இந்திய மாணவர் சங்கத்தை வலுமிக்க அமைப்பாக உருவாக்கிய தலைவர் களில் ஒருவரும் மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவராக பயின்ற காலத்தில் சங்கத்தின் மாநிலத் தலை வர்களில் ஒருவராக பொறுப்பேற்று செயல்பட்டவருமான தோழர் க.செல்வ ராஜ். மகத்தான மாணவத் தியாகிகள் சோமு-செம்பு ஆகியோரது படு கொலைக்கு முன்பும் பின்பும் மதுரை யில் மாணவர் இயக்கத்தை கட்டி வளர்த்த தலைவர்களில் ஒருவர் அவர்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்ற பொழுது இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற மருத்துவ மாணவர்களின் போராட்டத் திற்கு தலைமையேற்ற இவர், காவல் துறையில் கைது செய்யப்பட்டு 48 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள ஷெனாய்நகர் அரசுப் பள்ளிக்கு அடிப் படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அன்றைய மாணவர் சங்க தலைவர் சுப்பையாவுடன் இணைந்து நடத்திய போராட்டத்தின்போது ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிப் பதை எதிர்த்து தீரமிக்கப் போராட்டத் தை இந்திய மாணவர் சங்கம் நடத்தி யது. அப்போராட்டத்திற்கு தலைமை யேற்றவர் தோழர் க.செல்வராஜ். போராட்டத்தின் முடிவில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட சேலம் விநாயகா மிஷன் உள்ளிட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகள் தவிர, புதிதாக தமிழகத்தில் எந்தவொரு தனியார் மருத்துவக் கல்லூரியும் அனுமதிக்கப்படமாட்டாது என்று அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இந்திய மாண வர் சங்கத்தின் தரப்பில் கையெழுத்திட்ட வர் அவர். மதுரை மாவட்டத்தில் ஆட்சி யராக சந்திரலேகா இருந்த சமயத்தில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி தாக்குதல்களை ஆட்சியர் கட்டவிழ்த்து விட்டார். அதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தோழர் செல்வராஜ்.
பின்னர் மருத்துவராக, மதுரை புறநகர் மாவட்டம் யா.ஒத்தக்கடையில், மனிதநேயத்தைப் பரப்பிய அன்பு மருத்துவமனையை நடத்தி வந்த அவர், எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, அர சியல் விமர்சகராக, மார்க்சிய சிந்தனை யாளராக மிளிர்ந்தார். மக்களுக்கான மருத்துவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் பொறுப்பு களில் செயல்பட்டு வந்தார். மாணவப் பரு வம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதிமிக்க ஊழியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தனது இறுதிமூச்சுவரை தியாகிகள் சோமு-செம்பு நினைவை நெஞ்சில் ஏந்தி, அவர்களது வழியில் இளைய தலை முறையை மார்க்சிய இயக்கத்தில் அணி திரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ச்சியாக பல முயற்சிகளை முன்னெடுத்து வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அத்தியாகிகளின் சொந்த கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் மறைந்த தோழர் என்.வரத ராஜன் பங்கேற்புடன் மாபெரும் நினை வேந்தல் நிகழ்ச்சியை நடத்தி, தியாகிகள் குடும்பத்தை கவுரவிப்பதிலும், தொடர்ந்து அக்குடும்பங்களை பாது காப்பதிலும் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டவர். அறிவொளி இயக்கம் மூலம் வீதி நாடகங்கள் நிகழ்த்துவதில் துவங்கி சப்தர் ஹஷ்மி நாடகக்குழு, மதுரை கூடல் அரங்கு என்ற பெயர்களில் நீண்டநெடிய - உயிர்ப்புமிக்க நாடக இயக்கத்தை மதுரையில் வளர்த்தவர். உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், மதுரை கூடல் அரங்கு சார்பில் கடந்த அக்டோபர் 27 அன்று தான் “மந்தையன் நேற்று செத்துப்போனான்” எனும் சிறந்ததொரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்.
சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்த டாக்டர் க.செல்வராஜ் புதனன்று மதியம் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் சிகிச்சை பல னின்றி காலமானார். அவரது மனைவி பேராசிரியர் சாந்தி, மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவராவார். அவருக்கு இசையமுது என்ற மகள் இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் கருப்பையா - எஸ்தர் தம்பதியரின் மகனாகப் பிறந்து, பட்டிவீரன்பட்டி கிராமத்தில் பள்ளிப்படிப்பு பயின்று, முதல் தலைமுறை மாணவராக மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைத்து, மருத்துவ மாணவர்களின் கல்விக்கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏழை, எளிய உழைப்பாளி குடும்பத்து குழந்தைகளின் கல்விக்கனவை பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் டாக்டர் க.செல்வராஜ்.
தலைவர்கள் இரங்கல்
அவரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.