அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தை உடனடியாக கூட்டுக!
முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை,மார்ச் 28- கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல விதமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண நட வடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அவசர மாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
தற்போது நாம் அசாதாரணமான சூழ்நிலை யைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைப்பை நல்கி வருகிறார் கள். இருப்பினும் இந்த வைரஸ் பாதித்தவர் களின் எண்ணிக்கை சிறுகச்சிறுக உயர்வது மிகுந்த கவலையளிக்கிறது. அடுத்த சில நாட்க ளில் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.
கொரோனா நோயினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ நிலையில் அதை சமாளிக்க நாடு முழுவதும் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. சில மாநில அரசுகள் ஒரு லட்சம் படுக்கை வசதிகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சில மாநிலங்களில் தங்கும் விடுதி களிலுள்ள 20 ஆயிரம் அறைகளை தயார் செய்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சில மாநி லங்களில் தற்காலிக மருத்துவமனைகள் போர்க்கால அடிப்படையில் கட்டப்படுவதாக செய்திகள் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசும் நிலைமையை ஈடு கொடுக்க பலகட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவது பாராட்டத்தகுந்தது. ஆனா லும், பாதிக்கப்பட்டவர்கள் சில ஆயிரம் என்ற நிலை வருமாயின் அதை சமாளிக்க உரிய முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளை முழுவதும் ஒதுக்குக!
தனியார் மருத்துவமனைகளில் இதற்கென ஒரு வார்டு ஒதுக்கி தயார் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டும் போதுமான தாகத் தோன்றவில்லை. மேலும், சில தனியார் மருத்துவமனைகளையே ஒட்டுமொத்தமாக இதற்கென ஒதுக்கீடு செய்திட வேண்டும். தனி யார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றுவது போன்ற பணி களையும் மேற்கொள்ள வேண்டும்.
செங்கல்பட்டிலுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் ‘இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை’ முழுமையாகப் பயன்படுத்தவது குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்நிறு வனத்தில் சானிடைசர் தயாரிப்பதற்கும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்வ தற்கும் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள் ளதைப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மத்திய அரசை அணுகி உரிய அனுமதிகளைப் பெற்று மேற் கண்ட நடவடிக்கைகளை அவசரமாக துவங்கிட வேண்டும்.
மருத்துவக்கட்டமைப்புகளை விரிவுபடுத்துக!
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனி மைப்படுத்துவது அவசியமானது என்றாலும் அதுமட்டுமே போதுமானதல்ல என உலக சுகா தார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வைரஸ் அறிகுறி உள்ள அனைவரையும் சோதனை செய்வதற்கான ஏற்பாடும் அதற்கான மருத்துவக் கட்டமைப்புகளையும் அவசரமாக உருவாக்கிட வேண்டுமென மேற்கண்ட நிறு வனம் ஆலோசனை வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வைரஸ் அறிகுறி யுள்ள அனைவரையும் சோதனை செய்த வற்கான விரிவான ஏற்பாடுகள் செய்வதும், பாதித்துள்ளவர்களை ஆங்காங்கே தனிமைப் படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதற்கான மருத்துவக் கட்டமைப்பு களையும் விரிவுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் சானிடைசர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரி விக்கின்றனர். எனவே, தமிழக அரசே தொழிற் சாலை மூலம் சானிடைசர் உற்பத்தி செய்து அதனை நியாய விலைக் கடைகள் மூலம் இல வசமாக வழங்க வேண்டும்.
தற்போது நிலவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைப் பணையம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். எவ்வளவு வற்புறுத்திய பிறகும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்புக்கான சிறப்பு உபகரணங்கள் N-95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை. மருத்துவமனைகளில் பணியாற்றும் இதர மருத்துவர்களுக்கும், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வில்லை. சாதாரண காலங்களில் பயன்படுத்தும் அல்லது எச்ஐவி நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்கும்போது பயன்படுத்தும் உபகர ணங்களே வழங்கப்படுவதாக தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது என்பதை தங்களது கவ னத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அவசர அவசியமாக மருத்துவப் பணியில் ஈடு பட்டுள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்கிட வேண்டும்.மேலும், தனிமைப் படுத்தும் வார்டுகள், காய்ச்சல் பிரிவு வார்டு களில் பணிபுரிபவர்களுக்கு PPE (Personal Protective Equipment) வழங்கிட வேண்டும்.
விலை உயரும் அத்தியாவசியப் பொருட்கள்
ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது மக் கள் பலவிதமான இடர்பாடுகளைச் சந்தித்து வரு கின்றனர். பல இடங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை வாசி உயர்ந்துள்ளன. அரிசிப் பற்றாக்குறையின் காரணமாக தென்மாவட்டங்களில் கிலோ ரூ 50, 60 என உயர்ந்துள்ளது. விவசாயிகள் தங்களது விளை பொருட்களான வாழை, கொய்யா, மலர்கள், பலா, தர்பூசணி, வெள்ளரிக்காய், முருங்கக்காய், கடலை, தேயிலை போன்ற சாகு படியான பொருட்கள் விற்பனை செய்ய இயலா மல் அவை அழுகி வருகின்றன. கால்நடை களுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் பாலை விற்க முடிய வில்லை. காய்கறிகள் மற்றும் விவசாயப் பொருட்கள் உற்பத்தியான இடங்களிலிருந்து சந்தைகளுக்கு எடுத்து வர முடியாமல் தேங்கிக் கொண்டிருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதுபோன்ற பட்டியலிட முடியாத அளவிற்கு மக்கள் சந்திக்கும் பிரச்ச னைகள் நீண்டு கொண்டுள்ளன.
தமிழகம் சந்திக்கும் இத்தகைய அசாதார ணமான சூழ்நிலையை அரசு மற்றும் ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து கலந்து ரையாடல் நடத்துவதற்கு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஒருவேளை கூட்ட மாக நடத்த முடியாவிட்டால் வீடியோ கான்பரன் சிங் மூலமாக கலந்துரையாடுவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.