சென்னை,டிச.31- சேலம், ஓசூர் உள்பட 5 இடங்களில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சிவாஜி நகரில் ஐ.எம்.ஏ. நிதி நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை முகமதுமன்சூர்கான் என்பவர் நடத்தினார். இங்கு முதலீடு செய்தால் வட்டியுடன் சேர்த்து அந்த பணத்திற்குரிய நகைகளைத் தருவ தாகக் கூறியிருந்தார். அவரது பேச்சை நம்பி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 76 ஆயிரம் பேர் முதலீடு செய்திருந்தனர். ஆனால் யாருக்கும் பணமோ, தங்கமோ திருப்பி தரப்படவில்லை. கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு இந்த நிறுவன அதிபர் முகமது மன்சூர்கான் துபாய் தப்பி ஓடினார். இந்த மோசடி வழக்கை முதலில் கர்நாடக சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் துபாயிலிருந்து திரும்பிய முகமது மன்சூர்கான் உள்பட 22 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள். கார்வார், பெங்களூரு, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 5 பேரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இரண்டாவது நாளாக (செவ்வாயன்று டிச.31) இந்த சோதனை நடந்தது. பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புலனாய்வு பிரிவு துணை ஆணைய ராக பணியாற்றும் சவுரப்நாயக், சொத்து மதிப்பீடு பிரிவில் உதவி ஆணைய ராகப் பணியாற்றும் சேலத்தைச் சேர்ந்த குமார் மற்றும் தரகர்களாகச் செயல்பட்ட ஆசிஸ் ஜெயின், கிரண்ப மேடி, கைசல்பாட்சா ஆகிய 5 பேரின் வீடுகளில் தான் சி.பி.ஐ. அதிகா ரிகள் இந்த சோதனையை நடத்தி வருகி றார்கள். மொத்தம் 8 வீடுகளில் இந்த சோதனை நடந்தது. சேலம் அழகாபுரம் பெரியசாமி நகர் 6-வது கிராசில் உள்ள வருமான வரித்துறை உதவி ஆணையர் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.