tamilnadu

எத்தனை வித நெருக்கடிகளை கொடுத்தாலும் எதிர்கொள்வோம் பெருமாநல்லூர் பிரச்சாரக் கூட்டத்தில் இரா.முத்தரசன் பேச்சு

ஈரோடு, ஏப்.3- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெருமாநல்லூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து புதனன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 400, 500 கோடி ரூபாய் என விலை பேசி வாங்கப்பட்ட எந்தக் கட்சியும் இங்கு இல்லை. நீங்கள் இங்குத்தான் சேர வேண்டுமென வற்புறுத்தியும், மிரட்டியும் சேர்ந்த அணி இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மக்களின் பிரச்சனைகளுக்காகவும், நடுத்தர மக்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக, முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு இழைத்த துரோகங்களுக்கு எதிராக, அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மாநில அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து இக்கட்சிகள் இணைந்து போராடின. இக்கூட்டணி கொள்கை அடிப்படையில் தேசத்தை பாதுகாக்கவும்,  அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும்,  மதச்சார்பின்மை கொள்கையை பாதுகாக்கவும் என்ற உயரிய கொள்கையோடு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் நீட் தேர்வு, காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணித்த ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராடி உள்ளோம். தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றி கவலைப்படாத ஆட்சியாளராக எடப்பாடி ஆட்சி இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கு ஒரே காரணம்தான், மோடியின் தயவில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு உள்ளது.  மோடியையும், எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நிராகரிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சென்னையில் மோடி வந்து பேசினார். சென்னையிலும் காஞ்சிபுரத்திலும் உள்ள அரசு போக்குவரத்து பேருந்துகள் அந்த கூட்டத்திற்கு திருப்பி விடப்பட்டது. கல்வி நிலையங்களுக்கு கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. ஆனால் 9 ஆயிரம் நாற்காலிகள் காலியாகத்தான் இருந்தது.  பாஜக-அதிமுக அணிக்கு எந்த எழுச்சியும் இல்லை, மக்கள் வருவதற்கும் தயாராகவும் இல்லை.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இந்தத் தேர்தலை சந்திக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 2004ஆம் ஆண்டு போன்று சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆதனால் தான் தனிநபர் தாக்குதல்களை எடப்பாடி நடத்தி வருகிறார். தோல்வி பயத்தால்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளை கொடுக்கின்றனர். எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் அதை எதிர்கொள்வோம். எதிர்வரவுள்ள கலைஞரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது மத்தியில் மோடியின் ஆட்சியும், மாநிலத்தில் உள்ள எடப்பாடியில் ஆட்சியும் முடிவு கட்டப்பட்டிருக்கும்.எனவே திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிபிஐ வேட்பாளராக கே.சுப்பராயன் போட்டியிடுகிறார்.  அவரை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.