1980 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (ஐஎம்எப்) கட்டளைக்கிணங்க மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பைஏற்படுத்தின. தேசத்தின் சுயசார்பும் ஒருமைப்பாடும் அபாயத்தில் சிக்கின. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்ததுடன் உலகவங்கி மற்றும் ஐஎம்எப் இடமிருந்து கடன் பெறுவதற்காக அவை விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டது.
1982ல் நடைபெற்ற அந்த முதலாவது பொது வேலை நிறுத்தத்தில் பலியான 10 தோழர்களின் தியாகத்தை நினைவு கூரும் நாளான ஜனவரி 19ஆம் தேதி தொழிலாளர்- விவசாயி ஒற்றுமை தினமாக சிஐடியுவால் கடைப்பிடிக்கப்படுகிறது.சிஐடியு உள்ளிட்ட எட்டு மத்திய தொழிற்சங்கங்களும் 40-க்கும் மேற்பட்ட தொழில்வாரியான சம்மேளனங்களும் இணைந்து தேசிய பிரச்சாரக்குழு உருவாக்கப்பட்டு 1981ஆம் ஆண்டில் ஜூன் 4ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற சிறப்பு மாநாடு ‘‘தில்லியில் அணிவகுப்போம்’’ என்று முடிவு செய்தது. அறைகூவலை ஏற்று 1981 நவம்பர் 23 ல்நடைபெற்ற பேரணி தொழிற்சங்க -தொழிலாளிவர்க்க ஒற்றுமையின் மகத்தான வெளிப்பாடாகஅமைந்தது. இது நம்நாட்டு தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
பல்வேறு தொழில்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்களைச் சார்ந்த தொழிலாளர்களும்-ஊழியர்களும் இவ்வளவு பெரியஎண்ணிக்கையில் திரண்டு வந்து தலை நகரில் ஆர்ப்பரித்தது முன் எப்போதும் நடந்திராத ஒரு நிகழ்வாகும். இந்த ஆர்ப்பாட்டத்தின் அணிவரிசையில் பொதுத்துறை-தனியார்துறை, ரயில்வே, பாதுகாப்பு, மத்திய-மாநில அரசு ஊழியர்அமைப்புகள், இரும்பு, நிலக்கரி, சுரங்கம்,சணல், ஜவுளி, இன்ஜினியரிங், போக்குவரத்து, மின்சாரம் போன்ற நிறுவனப்படுத்தப்பட்ட தொழில்களிலிருந்தும், தோட்டம், கைத்தறி, பீடி, கட்டுமானம், சுமைஉள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் அலைஅலையாய் திரண்டனர். உழைக்கும் பெண்களின் மிகப்பெரிய அணிவகுப்பு; அவரவர் தொழிற்சங்கப்பதாகைகளுடன் கலந்து கொண்டது தொழிற்சங்க இயக்கத்தின் இன்னொரு புதிய விழிப்பாகும். பேரணியின் முடிவில் 1982 ஜனவரி 19 அன்று ஒரு நாள் அகிலஇந்திய கண்டன வேலை நிறுத்தம் மேற்கொண்டு அரசின் கொள்கைகளை நிராகரிக்குமாறு அந்த பேரணி அறைகூவல் விடுத்தது.
ஜனவரி 19 அன்று வேலைநிறுத்த அறைகூவலை ஏற்று வெளிப்பட்ட ஒற்றுமை, தொழிற்சங்க வரலாற்றிலேயே அதற்கு முன் கண்டிராதது. முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவோடுபல இடங்களில் இந்த வேலைநிறுத்தம் பந்த் ஆக மாறியது. வேலைநிறுத்த நாளன்று நாடுமுழுவதும் 10 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார்கள். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொழிலாளர்களோடு இணைந்து நின்று போராடிய விவசாயஇயக்கத் தோழர்கள் மீது தமிழக அரசு தன்
துப்பாக்கி முனையை நீட்டியது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தியாகச் செம்மல்கள் அஞ்சான், நாகூரான் (திருநெல்வேலி), ஞானசேகரன் (மன்னார்குடி) மூவரும் பலியானார்கள்.
மேலும் பெருமாள்நல்லூர், பிச்சங்கட்டளை, சீதை சிந்தாமணி, கண்ணங்குடி-சவுரியார்புரம், காலமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காவல்துறையினர் உள்ளே புகுந்து, ஆண்-பெண், குழந்தைகள் உட்படஅனைவரையும் மிருகத்தனமாக தாக்கினர்.குடிசை வீடுகளிலிருந்த பண்டபாத்திரங்களையும் நொறுக்கி நாசமாக்கி சூறையாடினர். நூற்றுக்கணக்கான தோழர்கள் பெரும் காயமுற்றனர்.தற்போது மோடி தலைமையிலான 5 ஆண்டுகால பா.ஜ.க.அரசின் படுபிற்போக்குத்தனமான கொள்கைகளால் இந்தியாவின் சகலபகுதி உழைக்கும் மக்களும், வேலையில்லா இளைஞர்களும் வரலாறு காணாத அளவில் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகினர். எனவேதான் இந்தியத் தொழிலாளி வர்க்கம் எவ்வாண்டும் இல்லாத அளவிற்கு 2019 ஜனவரியில் 15 கோடிப்பேர் பங்கேற்புடன் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. எனினும் மத்திய அரசின் போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.இந்நிலையில் அதே ஆண்டு நடைபெற்ற 15 ஆம் மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது தங்களின் தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை இன்னும் வேகமாக அமல்படுத்த ஏதுவாக அமைந்தது. எனவே 2020 ஜனவரி 8 அன்று 25 கோடிப்பேர் பங்கேற்புடன் அகில இந்திய வேலைநிறுத்தம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தோடு முடிந்துவிடாமல் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் மட்டுமே இந்திய உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்குதலை ஓரளவேனும் தடுத்து நிறுத்த முடியும்.
1982 - ஜனவரி 19ல் பலியான தியாகிகளை நினைவு கூறலும் அத்தியாகத் தடத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமையை உருக்கெனக் கட்டலும் ஒற்றுமையைக் குலைக்க ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கவும் அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வை வழிமறிக்கும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் போராட்டங்கள் கூர்மையடைந்து வெற்றி காணவும் அயராது உழைப்போம்.