tamilnadu

img

அழிவின் விளிம்பில் மண்பாண்டத் தொழில் அரசு அக்கறை செலுத்துமா?

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கோபால்பட்டி, குஜிலிய ம்பாறை, நத்தம் போன்ற  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களில் மண்பாண்டம் தொழிலை நம்பி  ஆயிரக்கணக்கான குடும்ப த்தினர் தொழில் செய்து வந்தனர்.  தற்போது முழுமை யாக மண்பாண்டத் தொழில் நலிவடைந்து விட்டது. கோடை காலம் மற்றும் விழாக்காலங்களில் மட்டும் பொதுமக்கள்  மண்பாண்ட பொருட்களை வாங்குகின்றனர்.  

மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:  கடந்த காலத்தில் கிராமப்பு றங்களில் அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள்  வீடுகள்தோறும் இருந்து வந்தன. இத்தொழிலானது கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மண்பாண்ட தொழிலாளர்களை அழிவில் இருந்து மீட்பதற்காக அந்தந்த மாவட்ட ங்களில் உள்ள குளங்களில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களிடம் எழுதிக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி மண் எடுக்கலாம் என்று அறிவித்திருந்தார். அதேபோல் மழை காலங்களிலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு என்று நிவாரணத் தொகையையும் கொடுத்து வந்தார் .ஆனால் தற்போது எந்த நிவாரணத் தொகையும்  மாநில அரசு கொடுக்கவில்லை.  
மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது  தொழிலுக்கு தேவையான மண்ணை எடுக்க வேண்டும் என்றால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விலை கொடுத்து வாங்கினாலும் உரிய அனுமதி இருக்கிறதா என்று பல்வேறு விசாரணைகள், பிரச்சனைகள் உள்ளன. 

நாங்கள் செய்யும் மண்பாண்ட பொருட்களை  10 முதல் 40 ரூபாய்க்கு வாங்கி சந்தையில் 70-150 ரூபாய் வரை விற்கின்றனர்.  கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி உள்ளோம். இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு மற்றும் கைவினை பொருட்கள் கழகம் இணைந்து அழிந்துவரும் இத்தொழிலை மீட்க  வேண்டும்.  எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.   
ஒரு சிலர் மட்டுமே தற்போது களிமண்ணால் ஆன மண் பானை, மண் குடம், குடிநீர் ஜாடி என்று பல்வேறு பொருட்கள் தயாரித்து வருகின்றனர். அப்படி தயாரிக்கும் பொருட்களை அவர்களது வீடுகளிலேயே சென்று அரசு நேரடியாக கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மாநில அரசு மண்பாண்ட தொழிலாளர்களின் கலைநயத்தை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மண்பாண்ட தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்றனர்.  மண்பாண்ட தொழிலாளர்கள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டுமா ?   
-ம.ஹரிஹரன்