tamilnadu

img

குறைந்த விலைக்கெல்லாம் கச்சா எண்ணெய் வழங்க முடியாது

புதுதில்லி:

ஈரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை முறித்துக்கொண்ட அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. உலக நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், மீறி வாங்கினால், அந்த நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது. இதற்கு அடிபணிந்து, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, கடந்த மே 2-ஆம் தேதியோடு மோடி அரசு நிறுத்திக் கொண்டது.


ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோவிடம், மத்திய வெளியுறவுத்துறை

அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கெஞ்சிப் பார்த்தார். எனினும், அமெரிக்கா அதை கண்டுகொள்ளவில்லை.


இதையடுத்து, ஈரானிடம்தான் எங்களை எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறி வீட்டீர்கள்; சரி நீங்களாவது எங்களுக்கு குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வழங்குங்கள் என்று மோடி அரசு அடுத்த கோரிக்கையை நீட்டியது. ஆனால், அதையும் அமெரிக்கா தூக்கியெறிந்து விட்டது.“இந்தியா உள்ளிட்ட நாடுகள், தங்களுக்கு தடையின்றி குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டன. ஆனால், அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தகம் தனியாரால் நடத்தப்படுகிறது; எனவே, நாங்கள் அவர்களை விலையைக் குறைக்குமாறு வலியுறுத்த முடியாது” என்று அமெரிக்க நாட்டின் நிதித்துறை செயலாளர் வில்பர் ராஸ், ஒரேயடியாக இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். 


ஈரான் நாடானது, இந்தியாவுக்கு இதுவரை மிகக்குறைவான விலைக்கு கச்சா எண்ணெய்யை வழங்கி வந்தது. மேலும் அதற்கான பணத்தை டாலரில் அல்லாமல், இந்தியா ரூபாயாகவே பெற்றுக் கொண்டது. இதனால் இந்தியா பலமடங்கு சலுகை அனுபவித்து வந்தது. தற்போது, அமெரிக்காவுக்கு அடிபணிந்து, ஈரான் உடனான எண்ணெய் வர்த்தகத்தை முறித்துக் கொண்டதால், இந்தியா பெரும் இழப்பைச் சந்திக்கத் துவங்கியுள்ளது.